மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு தமிழ் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆண்டுக்கு மூன்று முறை நடைபெற்று வரும் தமிழ்க் கூடல் மாணவர்களிடம் படைப்பாற்றலுக்கு பட்டை தீட்டுகிறது. தமிழ் இலக்கண இலக்கியங்கள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி துறை தமிழ்க் கூடல், தமிழ் இலக்கிய திறனாய்வு ஆகியவற்றின் வாயிலாக புதிய வாசலை திறந்து வைத்துள்ளது.
தமிழ்க் கூடல்: மாநிலம் முழுவதும் உள்ள 6, 218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ்மன்றங்களை வலுப்படுத்தி ஆண் டுக்கு மூன்று முறை தமிழ்க் கூடல் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழி யின் தொன்மை இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படவும் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
அன்றைய தினத்தில் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் ஆகியோரை கொண்டு சிறப்பு சொற்பொழிவு, கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்வதுடன், மாணவரிடம் புதைந் துள்ள கதை, கட்டுரை, பட்டிமன்றம், கவிதை, பேச்சு ஆகியவற்றின் திறனை வெளிக்காட்டும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ் திறனாய்வு தேர்வு: அரசு பள்ளிகள் மற்றும் பிற வகை பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் திறனாய்வு தேர்வை எழுதலாம். ஆண்டுக்கு ஒரு முறை நடை பெறும் இத்தேர்வுக்கு ரூ.50 கட்டணம். பள்ளிகளின் வாயிலாக விண்ணப்பித்து எழுத முடியும். இந்த ஆண்டு 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 750 மாணவர்களும், தனியார் பள்ளியில் படிக்கும் 750 மாணவர்கள் என மொத்தம் 1,500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு பணம் வழங்கப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில், கொள்குறி வகை 100 வினாக்கள் கேட்கப்படும். விடையை ஓஎம்ஆர்., சீட்டில் பதிவிட வேண்டும். பத்தாம் வகுப்பு தர நிலையிலிருந்து இலக்கண பாடப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
தமிழ் வாழ்க: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்கிறது அரசாணை. தமிழ் வளர்ச்சித் துறையும் பல்வேறு போட்டிகளை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி தமிழை வளர்க்கிறது. கடைகளில் விளம்பர பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற உத்தரவுள்ளது. பிளஸ் 2-க்கு பின்பு கல்லூரிகளில் தமிழ் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்து படித்து முனைவர் பட்டம் வரை சாதிக்கக்கூடியவர்கள் எண் ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
மாநில அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்க் கூடல் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு மாணவர்களுக்கு புதிய வாசல்களை திறந்து வைத்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் சாதிக்கலாம். தங்கள் திறமையை வெளிக்காட்டி பின்னாளில் சிறந்த படைப்பாளராக உருவாகலாம்.
- கட்டுரையாளர்: ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தையன்கோட்டை, ஆத்தூர் ஒன்றியம். திண்டுக்கல் மாவட்டம்.