சிறப்பு கட்டுரைகள்

இறகு இன்ஜினியர்கள்

காமாட்சி ஷியாம்சுந்தர்

எங்களது பள்ளியின் உயிரியல் ஆய்வகத்தை கடந்து சென்றபோது உள்ளே பத்திரமாக பாதுகாக்கப்பட்ட தூக்கணாங்குருவிகளைக் கண்டவுடன் உதித்ததே இக்கட்டுரை. சிறுவயதில் கிராமத்தில் வசித்ததால் தூக்கணாங்குருவி கூடுகளை உயர்ந்த மரங்களான தென்னை, பனை போன்றவற்றிலும் செழிப்பான நீர்ப்பகுதிகளின் அருகாமையிலும் நேரில் பார்த்த அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்று அறிவியல் ஆய்வகங்களில் காட்சி பொருளாக்கப்பட்டு இருப்பதிலிருந்து தூக்கணாங்குருவிகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்து போய்விட்டது என்று எண்ணி வருந்தினேன்.

தூக்கணாங்குருவியைப் பற்றியும்,அதனுடைய கூடு கட்டும் நேர்த்தியைப் பற்றியும் நான் தெரிந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தூக்கணாங்குருவி கூடு நெல் வைக்கோலால் மேற்பகுதி குறுகலாகவும், தொப்பை போன்ற பெரிய நடுப்பகுதியும், மீண்டும் குழாய்போன்ற குறுகலான அமைப்புடன்மிக நேர்த்தியாக நெய்யப்பட்டிருக்கும். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலை பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டுச் சாணம் போன்றவற்றை பசைபோல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.

இந்த குருவிகளின் சிறப்பான வடிவமைப்பு கொண்ட அலகால் வைக்கோலையும் புல்லையும் முடிச்சுப் போட்டு கூடு கட்டப்படுகிறது. இந்தக்கூடு மிக உறுதியானதாக இருக்கும். இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை. காற்றுக்கு கீழே விழுவதும் இல்லை. ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் கூடுகட்ட 18 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. குடுவை போல் இருக்கும் பகுதிக்கு எட்டு நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. இந்தக் கூட்டின் உள்ளே இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக ஈரமான களிமண்ணில் மின்மினி பூச்சிகளைக் கொண்டு வந்து ஒட்டவைத்து விடுவது சிறப்பு.

இதனை ஆண் குருவி கூடு கட்டி ஓரளவிற்கு முடித்த பின் தனக்கான பெண் குருவிக்கு இந்த கூட்டினை காட்டும். கூட்டின் உள்ளே சென்று பெண் குருவி பார்வையிடும். உள்கட்டமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதனை பெண் குருவியே கட்டி முடிக்கும். கூடு பிடிக்கவில்லை எனில் பெண் குருவி பறந்து போய்விடும். இங்கு ஆண் குருவியின் பொறுப்புணர்விற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. தனது இணைக்காக நேர்த்தியான கட்டமைப்புடன் அழகானதொரு கூட்டினை வடிவமைக்கும் தூக்கணாங்குருவிகள் அன்பின் அடையாளமாக இன்றளவும் திகழ்கின்றன.

இயற்கையின் தகவமைப்பில்

இணையின் விருப்பத்திற்கேற்ற

இல்லத்தை கட்டி முடிக்கும்

இறகு இன்ஜினியர்களை காத்திடுவோம்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

SCROLL FOR NEXT