எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட அரிக்கமேடு தொல்லியல் தளம், இன்று அதற்கான எந்த அடையாளங்களும் இன்றி காணப்படுகிறது. புதுச்சேரிக்கு தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் சங்க காலம் தொட்டே கொற்கை, அழகன்குளம் மாமல்லபுரம், மரக்காணம், போன்ற பல்வேறு துறைமுக பட்டினங்கள் இருந்துள்ளன. அவற்றில் அரிக்கமேடு முக்கியமான வாணிபத் தலமாக செயல்பட்டுள்ளது என்பது இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
பொதுக்கே என்னும் வாணிபத்தலம்: அரிக்கமேடு கி.மு 200 முதல் கி.பி 200 வரை புகழ்பெற்ற வாணிபத் தலமாக திகழ்ந்துள்ளது. அயல்நாட்டு பயணிகளான பெரிப்ளஸ், தாலமி போன்றவர்கள் காவிரிப்பூம்பட்டினத்திற்கும் மரக்காணத் திற்கும் இடையே பொதுக்கே என்னும் வணிகத்தலம் இருந்தது என்று தங்களது பயண குறிப்பில் குறிப்பிடுகின்றனர். பொதுக்கே என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு தான் என்று வரலாற்று ஆய்வாளரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனருமான மார்ட்டியமர் வீலர் கருதுகிறார்.
ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு: அரிக்கமேடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதற்கு ஆதாரமாக ரோமாபுரியின் பேரரசர் அகஸ்டின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் இங்கு கண்டெடுக் கப்பட்டுள்ளன. ரோமானியர்களுடன் மட்டுமின்றி கிரேக்கர்களுடனும் தமிழர்கள் வாணிபத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 1940களில் தென்னங்கன்று வைப்பதற்காக குழி தோண்டும் போது கிடைக்கப்பெற்ற அரிய பொருட்களைப் பற்றி அறிந்த மார்டிமர் வீலர் என்பவர் முதன் முதலில் இங்கு அகழாய்வு செய்து புதையுண்ட பல தொல்பொருள்களை கண்டெடுத்தார்.
இங்கு தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருள்கள் புதுச்சேரி அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன . 1937-ம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் லவோய் தீப்ராய், அரிக்கமேடு பகுதிக்கு சென்றபோது அங்கு அவர் சில அரிய பொருள்களை கண்டுள்ளார். அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்கள் பல அரிய பொருள்களை கண்டெடுத்து பேராசிரியரிடம் கொடுக்கும் போது அதற்கு ஈடாக அவர் பணம், மிட்டாய்போன்ற பரிசு பொருட்களை வழங்கி யுள்ளார். இவ்வாறாக அரிக்கமேடு என்னும் தொல்லியல் தளம் வெளியுலகின் பார்வைக்கு வந்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்: இங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், எண்ணெய் மற்றும் மது ஜாடிகள், மணிகள், டெரகோட்டா பொம்மைகள், சுடுமண் விளக்கு போன்றவை வரலாற்று சிறப்புமிக்க அரிக்கமேடு பகுதியை காண வேண்டும் என்ற ஆவலை அதி கரிக்கிறது. ஆனால், தொல்லியல் அகழாய்வு நடந்ததற்கான சான்றுகளாக எவற்றையும் நம்மால் அங்கு பார்க்க இயலவில்லை. புதர் மண்டிய இடத்தைத்தான் காண முடிகிறது. இந்திய தொல்லியல் துறையால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அகழாய்வு நடந்ததற்கான எந்தஅடையாளங்களும் இன்றி காணப்படுகிறது.
ரோம பேரரசோடு வாணிபத் தொடர்பு கொண்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் இன்று கவனிப் பாரற்று மாந்தோப்புக்கு இடையே இடிபாடுகள் கொண்ட கட்டிடத்தின் சில பகுதிகளுடன் தன்னுடைய தொன்மையின் அடையாளத்தை இழந்து காணப்படுகிறது. தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடம் என்பதற்கான எந்த அறிகுறியும் அங்கு தென்படவில்லை. சமூக விரோதிகளின் புகலிடமாக அரிக்கமேடு இன்று மாறியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை இந்த தலைமுறை உணர்ந்தால் மட்டும் தான் இதுபோன்ற தொன்மையான இடங்கள் பாதுகாக்கப்படும்.
- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி குலமங்கலம்,மதுரை மாவட்டம்.