ஆனைமலை சாரலில் நெல் வயல்கள் பசுமை பாய்விரித்திருக்க இருபுறமும் மரங்கள் கைகோர்த்து நிழல் சேர்த்து பாதங்களில் பூக்களைத்தூவ, இன்முகத்தென்றலுடன் இயற்கை இனிமையாய் வரவேற்றது. அவ்வேளை எம் இதயங்கள் இதமாக, இனிமையோ கரங்களில் சேர மனம் குழந்தையாய் மாறி இயற்கை ஒன்றையே துணையாகக் கொண்டு ரம்மியமாய் காட்டிற்குள்ளே ஒரு பயணத்தை தொடங்கினோம்.
வழிநெடுக வானோங்கி நிற்கும் தேக்கு மரங்கள், இரைதேடும் வானரங்கள், இன்னிசை பாடும் வண்ணப்பறவைகள், அழகிய புள்ளிமான்களோடு சேர்ந்து தோகை விரித்தாடும் மயில்கள். ஆஹா! என்னே அழகு இவற்றையெல்லாம் கண்டு ரசித்திட கண்கள் என்ன தவம் செய்தனவோ?
இயற்கை அழகையெல்லாம் இனிமையாய் ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்த வேளையில் தொடர்ந்து செல்லலாமா? வேண்டாமா? என ஓட்டுநரை சிந்திக்க வைக்கும் யானையின் பிளிறல் சத்தம்ஓட்டுநர் தம் பார்வையை விசாலமாக்கி மெதுவாய் பேருந்தை நகர்த்தியபோது தூரமாய் ஆண் யானை ஒன்று பெண் யானையுடனும் தம் குட்டியுடனும் நின்று கொண்டிருந்தது. எச்சரிக்கையை புரிந்து கொண்ட ஓட்டுநர் அவைகளுக்கு இடையூறு ஏதும் செய்யாமல் ஒலிப்பானுக்கு ஓய்வு கொடுத்து பேருந்தை சாலை வழியே இயக்க யானைகளும் காட்டு வழியே தம் பயணத்தை தொடர்ந்தன.
பயணத்தின் ஊடே ஆங்காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்து கானகத்திற்கு வளம் சேர்த்தன. சற்று தூரம் சென்றதும் பேருந்தின் முன்னே சருகுமான் ஓட இருபுறங்களிலும் புள்ளிமான்கள் துள்ளிக்குதித்தோட இவற்றைக் கண்ட கஸ்தூரிமான்களோ தம் இனத்தோடு சேர்ந்து தாமும் விளையாட அத்துணை அழகிலும் கொள்ளை போன மனமோ ஓடிச்சென்று புள்ளி மானை முத்தமிட நினைத்தது. ஆனால் நாம் கண்ட அறிவிப்பு பலகையோ வாகனத்தை விட்டு யாரும் கீழே இறங்கக்கூடாது என எச்சரித்தது. அப்போதுதான் இயற்கைக்கு நாம் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்பதை மனம் உணர்ந்தது.
சற்று நிமிர்ந்த வேளையிலே முகில் போர்வை போர்த்துறங்கிய முகடுகள் தாம் கண்ட இன்ப கனவால் துள்ளி எழ, போர்வையில் இருந்த முத்துக்கள் சிதறி மழைத்துளிகளாய் மண்ணில் விழ, காட்டு மல்லிகை மொட்டுக்கள் கட்டவிழ்ந்தன. மல்லிகை மணத்தால் மனம் கவர்ந்த தேனீக்கள் ரீங்காரமிட்டு கூட்டம் கூட்டமாய் சென்று மல்லிகை பூவில் அமர அங்கிருந்த வண்ணத்துப்பூச்சிகளோ அருகில் இருந்த ரோஜா மலர்களுக்கு இடம் பெயர்ந்தன.. அடடா! மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை எத்தனை இருக்கின்றன. வானுயர்ந்த மூங்கில்களிலிருந்து வந்து வருடும் காற்றின் மயக்கத்திலே மனச்சுமை போனதே இதயங்கள் மேலும் இதமானதே.
கண்ணிற்கு எட்டிய தூரம் வரை பரந்திருக்கும் நீர்ப்பரப்பில் வண்ண மீன்கள் துள்ளிக்குதித்தோடும். நீர் காகங்களும் மற்ற நீர்ப்பறவைகளும் ஆனந்தமாய் இரைதேடும். நீரில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி மூங்கில் படகினிலே நாம் இயற்கையை ரசிக்கச் சென்றபோது ஆற்றின் கரையில் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த முதலை ஒன்று எமக்கு இங்கு தாராளமாய் உணவு கிடைக்கிறது, நீங்கள் எம்மைபார்த்துவிட்டு ஆனந்தமாய் செல்லுங்கள் என்று கூறி அமைதியாய் நீரினுள் தாவியது.
வனவிலங்குகளால் தமக்கு ஆபத்துஎன்று அறிந்தபோதும் அவ் விலங்குகளுக்கு தீங்கு செய்யா மனிதர் கூட்டமே இங்கு வாழ்கின்றனர். இவற்றையெல்லாம் கண்டு களித்த பின்னர் இறைவனைக் கண்ட மனிதன்என மனம் லேசாக அவ்விடத்தை விட்டு பிரிய மனமின்றி மீண்டும் பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.
- கட்டுரையாளர், எழுத்தாளர், வேட்டைக்காரன்புதூர், கோவை மாவட்டம்.