மேல் நிலை வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர், இறை வணக்கக் கூட்டத்திற்கு வராமல், கேட்டிற்கு வெளியிலேயே நின்றிருந்து, கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளேவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அவர்களை திட்டுவதாலோ, மிரட்டுவதாலோ காலதாமதமாக வரும் பழக்கத்தை மாற்ற முடியாது. அன்று, இறை வணக்க கூட்டம் முடிந்து, அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தனர். வழக்கம் போல்காலதாமதமாக வந்த மாணவர்களைப் பார்த்த ஒரு ஆசிரியர், “இவங்களுக்கு தனியா ஒரு பிரேயர் நடத்தினாதான் சரிப்படுவாங்க மேடம்” என்று எதேச்சையாக கூறினார். “ஆஹா! அருமையான யோசனை சார், நீங்கள் சொன்னதை இன்றே, இப்போதே, இங்கேயே செயல்படுத்திவிடலாம்” என்று கூறியபடி, லேட்டாக வந்த அந்த 6 மாணவர்களை அழைத்து வரிசையாக நிற்கச் சொன்னேன்.
“பிள்ளைகளா, இப்போ நீங்க மட்டும் தனியா ஒரு இறை வணக்கக் கூட்டம் நடத்துங்க” என்று எரிச்சல்படாமல், அழுத்தம் திருத்தமாக கூறினேன். முதலில் சற்று மிரட்சி அடைந்த மாணவர்கள், “எங்களுக்கு தெரியாது டீச்சர்” என்று கூறினர். “அதுக்காகத்தான் தினமும் பிரேயர் அட்டெண்ட் பண்ணனும், சரி, உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கள்” என்றுகூறினேன். உறுதிமொழி சொல்வது, பழமொழி, திருக்குறள் போன்ற எதையும் சரிவர சொல்ல முடியாமல் தடுமாறினர்.
“சரி, வகுப்புக்கு போங்க, நாளை முதல்ஒரு மாணவன் லேட்டா வந்தாலும் கூட அவன் தனியாக பிரேயர் நடத்தி விட்டுத்தான் போக வேண்டும்” என்று எச்சரித்தேன். அதனால் தனியாக ஒரு பிரேயர் செய்வதற்கு பயந்து, மாணவர்கள் நேரத்தோடு வரத் தொடங்கினர்.
ஆசிரியர்களின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு சென்று, அந்த வாகனத்தில் உள்ள கண்ணாடியில் முகம் பார்த்து, தலையை கோதிவிட்டுச் செல்வர். அவ்வாறுசெல்லும் போது, அந்த வாகனங்களின் மீது அமர்ந்து கொண்டு இருப்பர். அதனை தவிர்ப்பது எப்படி என்று யோசித்தேன்.
முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினை வாங்கி, குடிநீர் குடித்துவிட்டு வரும்வழியில், எனது (தலைமை ஆசிரியர்) அறையின் வெளிப்புறசுவரில் மாட்டினேன். அதன்பிறகு வாகனங்களின் அருகில் மாணவர்கள் செல்வது குறைந்துவிட்டது. மாணவர்களிடம் கோபப்படாமல் சற்றே மாற்றி யோசித்தால், நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்