நெடுநாட்களாக தேவி என்ற சிறுமிக்கு வானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். மழை பெய்ய தொடங்கியது. குடையின்றி தேவி நின்றிருந்தால் ஒரு வண்ணமயமான அழகிய குடை அவள் முன்பு வந்து விழுந்தது.
அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே குடையை கையில் எடுக்க குடை யுடன் சேர்ந்து தேவியும் உயர பறக்க தொடங்கினாள்.
குடை சொன்னது, நான் ஒருமந்திரம் சொல்லுகிறேன் அதை கவனமாக கேட்டுக்கோ. வானத்தில் பறக்கும் மகிழ்ச்சியில் தேவி, சீக்கிரம் சொல் என்று குடையை மிரட்டினாள்.
“சிக்கிடி சிக்கிடிச்சா” என்ற மந்திரத்தை குடை சொன்னது. இன்னொரு முறை மந்திரத்தை சொல்கிறேன் என்றபோது போதும் ஒருமுறை சொன்னாலே நினைவில் வைத்துக்கொள்வேன் என்று தன்னுடைய ஞாபகத்திறன் மீது கொண்ட அளவில்லா நம்பிக்கையில் திமிராக குடையிடம் “எனக்கு இன்னொரு முறையெல்லாம் சொல்ல வேண்டாம்” என்றாள் தேவி.
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லா மல் வானத்தில் பறக்கும் பறவைகள், தன் காலுக்கு கீழே தெரியும் சிறிய வீடுகள் எல்லாவற்றை ரசிக்கும் போது மெய்மறந்து குடையில் இருந்து கையை எடுத்துவிட்டாள் தேவி. வானத்தில் இருந்து சரசரவென தேவி கீழே விழும்போது, அந்த மந்திரத்தை சொல் வந்து காப்பாற்றுகிறேன் என்றது குடை. பயத்தில் மந்திரத்தை தேவி மறந்தே போனாள்.
கடலில் விழாமல் எப்படியோ தப்பித்து காட்டில் அடர்ந்த மரத்தின் மீது படுத்திருந்த பாம்பின் மீது விழுந்துவிட்டாள். தும்பு என்ற அந்த பாம்பு தேவியை அன்புடன் பார்த்துக் கொண்டது. சிம்பு என்ற சிம்பன்ஸி குரங்கு, அணில் வம்பு, யானை தம்பு இவற்றெல்லாமிடமும் தேவி கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமான பதில்களை அவை வழங்கின. தேவியின் பசியையும், தாகத்தையும் போக்க தும்பு பாம்பு அதன் நண்பன் தம்புவுடன் தேவியை அனுப்ப எடுத்த முயற்சிகள் படிப்பவர்களுக்கு சிரிப்பையும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறையையும் புரிய வைக்கும்.
தேவிக்கு ஏற்பட்ட மறதி, அத னால் அவள் படும் துன்பங்கள், காட்டில் கிடைத்த புது அனு பவங்கள் என விறுவிறுப்பாக நகர்கிறது, வெறும் 31 பக்கங்களே கொண்ட ‘மந்திரக்குடை’ சிறார் நாவல். அந்த இரவு கழிந்ததும் தேவிக்கு மந்திரம் நினைவிற்கு வந்ததா, இல்லையா? குடை மீண்டும் அவளை காப்பாற்றியதா இல்லையா? என்பதே மீதி கதை.
‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மந்திரக்குடை’ நாவலின் ஆசிரியர் ஞா.கலையரசி ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி. இவர் 5 சிறுவர் கதை நூல்களை மின்னூல்களாக வெளியிட்டுள்ளார்.
மந்திரக்குடை (சிறார் நாவல்)
ஞா. கலையரசி
புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ. 30/-
தொலைபேசி: 044 24332424