விடிய விடிய பட்டாசு வெடித்து, விடிந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்து, நண்பர்களுடன் ஓய்வில்லாமல் ஊர் சுற்றித் தீபாவளி கொண்டாடிய நம் கண்ணனா இவன். இது, கண்ணன் அப்பாவின் ஆச்சரியம். கண்ணன் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து 2 வருடங்கள் ஆன இளைஞன். தாராளமாய் செலவு செய்து தீபாவளி சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும், கண்ணன் வாழ்வில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று தான் இது நடந்தது.
கண்ணனும் நண்பர்களும் தெரு முனையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது சட்டை இல்லாமல் வந்து கொண்டிருந்தான் அச்சிறுவன். நண்பர்கள் வெடிக்கும் பட்டாசுகளின் அழகைக்கூட கண்டு களிக்க முடியாத அவனது வறுமை, ஒட்டி இருந்த தன் வயிற்றுக்கு ஒரு வேளை உணவைத் தேடிக் கொண்டிருந்தது.
டப டப டப டப டப டப...... பட்....பட் ..... என்ற வெடிச்சத்தத்துடன். அம்மா! என்றோர் அலறல் சத்தம் கேட்டு நண்பர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அங்கே சட்டை இல்லாமல் இருந்த சிறுவன் மீது தீப்பொறிகள் பட்டதால் ஏற்பட்ட காயத்தால் அலறித் துடித்தான். அவனை தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்தும் தைப்பொங்கல் அன்றுதான் அவன் காயங்கள் காணாமல் போயின. அன்றுதான் புஸ்வானம் வெடித்துக் கொண்டிருந்த கண்ணன் மனதில் பூவானம் தெரிந்தது. ஆம்! இன்று தீபாவளி. ஆனால், கண்ணனோ அடுத்த தெருவில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் மத்தாப்புசிரிப்புடனும் கைதட்டல் வெடியுடனும் மழலைகளின் நடுவில் சங்குசக்கரமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.
- கட்டுரை: இடைநிலை ஆசிரியை அரசு தொடக்கப்பள்ளி, பரம்பிக்குளம், கோவை மாவட்டம்.