சென்னையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை கூட்டம். கோப்புப் படம் 
சிறப்பு கட்டுரைகள்

வலுப்பெறும் பள்ளி மேலாண்மைக் குழு

சோ.இராமு

அரசு பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழுவாகும். இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும், இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

துணைக் குழுக்கள்: பள்ளி முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மை குழுவோடு இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமை களான கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றிற்கும் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிட துணை குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

இம்மாதம் (அக்டோபர்) இறுதிக் குள் பெற்றோர்கள் கூட்டம் நடத்தி துணை குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். பள்ளிவளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இரண்டு முதல் ஐந்து பெற்றோர்கள் குழுவில் உறுப்பினராக இடம் பெறுவர். இவர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது. இந்த விபரம் TNSED Parents Appல் பதிய வேண்டும். அதன்படி, ஐந்து வகையான துணைக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இடைநிற்றலை தவிர்க்கும் குழு: பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில்பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் பள்ளியில் பயில்வதை உறுதி செய்தல், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எவரும் குழந்தை திருமணம், சமூக கொடுமைக்கு ஆட்படாதவாறு தடுத்தல். பள்ளி இறுதிவகுப்பு முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஏதேனும் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் பயில்வதை உறுதி செய்தல் உள்ளிட்டவை இக்குழுவின் பணிகள் ஆகும்.

உள்கட்டமைப்பு குழு: பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை, சிறுநீர் கழிப்பிடம், போதிய காற்றோட்டமான இருக்கை வசதியுடன்கூடிய வகுப்பறை, நூலகம்,சமையலறை, விளையாட்டு மைதானம், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், அத்தியாவசியமான உள்கட்டமைப்புத் தேவைகளை இக்குழு கண்காணிக்க வேண்டும்.

உணவு மற்றும் நலத்திட்ட குழு: உணவு மாதிரி எடுப்பதை உறுதி செய்தல், காலை சிற்றுண்டி, மதிய உணவு திட்டம், சமையல் பாத்திரங்களின் தூய்மை, காய்கறிகள், உணவுப் பொருட்கள், பதிவேடு, இருப்பு, உள்ளிட்டவற்றை இக்குழு கண்காணிக்கும்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு: மாதவிடாய் கால பாதுகாப்பு, வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதை உறுதி செய்தல், பாலியல் அத்துமீறலை தடுத்தல், பள்ளியில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், தொற்று நோய், சமையலறை தோட்டம், கழிவுநீர் மேலாண்மை, மேல்நிலைத் தொட்டியின் தூய்மை, கழிவறை தூய்மை ஆகியவற்றைக் கண்காணித்து இக்குழு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கும்.

விழிப்புணர்வு பிரச்சார குழு: முன்னாள் மாணவர்களை ஒருங்கி ணைத்தல், உதவிகள் பெறுதல் மற்றும் அரசின் கல்வி சார் திட்டங்களான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்பு இயக்கம், நான் முதல்வன், மணற்கேணி, நம்மஸ்கூல் பவுண்டேஷன், உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், மன்ற செயல்பாடுகள், கலைத்திருவிழா ஆகியன சார்ந்து பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்குழுவின் பணிகள் ஆகும்.

- கட்டுரையாளர் ஆசிரியர், ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தையன்கோட்டை, ஆத்தூர்ஒன்றியம், திண்டுக்கல்.

SCROLL FOR NEXT