சிறப்பு கட்டுரைகள்

இன்றைய தேவையாகிறது அப்துல்கலாமின் கருத்து - ‘சிறந்த நாளுக்காக இன்றைய நாளை தியாகம் செய்வோம்’’

கலாவல்லி அருள்

பள்ளிப் பருவ நாட்களில், பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக பள்ளி நேரம் தவிர்த்து, பிற நேரங்களில் செய்தித் தாள் விநியோகம் செய்து, தனது தாழ்வு மனப்பான்மையை மனதிலிருந்து அகற்றி வெற்றி கண்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

கல்லூரி மாணவனாக இருந்தபோது, பண நெருக்கடியை போக்குவதற்காக, அசைவ சாப்பாட்டை தவிர்த்து, சைவ சாப்பாடு சாப்பிட நேர்ந்த போது, அதை மகிழ்வோடு ஏற்று, உணவிற்கு அடிமையாகாமல், தனது புலன்களை வெற்றி கண்டவர். பறக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாளைய ஆசை, நிராசையாகிவிட்ட போது, அதை நினைத்து மனம் தளராமல், அமைதியுடன் ஏற்றுக் கொண்டு சஞ்சலப்படும் மனதை வெற்றி கண்டவர்.

அனைத்திற்கும் மேலாக, மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே, தனது உயிர் பிரிய வேண்டும் என்ற அவரது ஆசை, நிறைவேறிய போது,மரணம்கூட அவர் எண்ணத்தை நிறைவேற்றி தன்னை வென்ற பெருந்தகை அவர் என்பதை இந்தஉலகிற்கு உணர்த்தியது.

நெருப்பிலிருந்து மீளும் ஃபீனிக்ஸ் பறவை போல, வாழ்க்கையின் போராட்டங்கள் எனும் நெருப்பிலிருந்து மீண்டு வந்த அவர், பிரச்சினைகள் எனும் அக்னியில் பொசுங்கிவிடாமல், தன் மன எண்ணங்களை சிறகுகளாக விரித்து, நல்லதையே நினைத்து வாழ்ந்து, ஆக்கபூர்வமான சிந்தனையின் மகிமையை, வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய மா மனிதர் அவர்.

சிறிய கஷ்டம் வந்தால்கூட, உடனே கண்ணீர் விட்டு அழுது, கவலைப்பட்டு, தீர்வை கணிக்க இயலாமல் சோர்ந்து போய், மன உளைச்சலுக்கு ஆளாகின்ற, இன்றைய பிள்ளைகளுக்கு ‘அக்னிச் சிறகுகள்’ என்ற இவரது வாழ்க்கைக் கதை மிகப் பெரிய படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. “அமைதியான வாழ்க்கைக்கு இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

தோல்வியின் போது ஏற்படும் மனச் சோர்வு ஒருபோதும் இதயத்திற்குச் செல்லக்கூடாது. வெற்றியின் போது ஏற்படும் பெருமிதம் ஒருபோதும் மூளைக்குச் செல்லக்கூடாது” என்ற அவரது கூற்று ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. “வெற்றி பெறுவதற்கான எனது உறுதிப்பாடு போதுமானதாக இருந்தால், தோல்வி என்னை ஒரு போதும் முந்தாது” என்று கூறியதோடு, அதை வாழ்வில் நிரூபித்தும் காட்டினார். இறுதியாக, “நம் குழந்தைகள் சிறந்த நாளைப் பெற, நமது இன்றைய நாளைத் தியாகம் செய்வோம்” என்ற அப்துல்கலாமின் கருத்து என்றும் எல்லோருக்கும் தேவையான ஒன்று.

- கட்டுரையாளர்தலைமையாசிரியர்,அரசு மேல்நிலைப் பள்ளி, சிங்காடி வாக்கம்,காஞ்சி மாவட்டம்.

SCROLL FOR NEXT