தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டி ருந்தாலும் அவற்றுள் சில அகழாய்வு தளங்கள் பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. இலக்கிய ஆதாரங்களின் துணை கொண்டு மட்டுமே பேசி வந்த தமிழ் குடியின் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது சிறப்பு.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கொற்கையில் நடைபெற்ற அகழாய்வின் போது தமிழர்களின் கடல் கடந்த பொருளாதார பரிவர்த்தனைகளை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள் மட்டுமின்றி தொழில் திறன்மிக்க அறிவுசார்ந்த சமூகம் வாழ்ந்ததற்கான வாழ்விட சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் தலைநகரம்: இடைச்சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கியது கொற்கை நகரம். இந்த நகரம் தற்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் வங்காள விரிகுடாவிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
1961- ல் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் அகழாய்வு கொற்கை அகழாய்வு ஆகும். 52 ஆண்டுகள் கழித்து கொற்கையில் மீண்டும் அகழாய்வு செய்யப்பட்டு பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள், கண்ணாடி மணிகள்,சிப்பிகள், கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் 9 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்தப் பொருள்களை பகுப்பாய்வு செய்ததில் இதன் காலம் கி மு 8-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வன்னி மரமும் உள்ளது. ஒருகாலத்தில் தாமிரபரணி ஆறு கொற்கை வழியாக ஓடி வங்கக் கடலில் கலந்திருக்கிறது. கால மாற்றத்தின் காரணமாகவும் கடற்கோள் காரணமாகவும் கொற்கையிலிருந்து கடல் உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஊருக்குள் கடல் அலை அடித்ததற்கான சான்றுகளாக சங்கு, சிற்பி, உப்புமண் என கடல் சார்ந்த அத்தனை ஆதாரங்களும் தொடர்ந்து கிடைக்கின்றன. சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் பல்வேறு நாடுகளுடன் கடல் வாணிபம் மேற்கொண்டது என்பதற்கு சான்றாக கொற்கை துறைமுகப்பட்டினம் அமைந்துள்ளது.
வியப்பின் உச்சம்: 2,800 ஆண்டுகளுக்கு முன்பு ஒருசமூகம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்தபொருட்களை ஏற்றுமதி செய்து அந்நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தது என்பது வியப்பின் உச்சம். எந்த ஒரு சமூகம் அனைத்திலும் தன்னிறைவுடன் விளங்குகிறதோ அதுவே அதன் உற்பத்தி பொருட்களை வெளிநாட்டினருக்கு விற்கத் துவங்கும்.
அப்படிப்பட்ட தன்னிறைவு பெற்ற நாகரீக வளர்ச்சி அடைந்த சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது என்பதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகளை கொற்கை அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. கொற்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முத்து பிரபஞ்ச பேரழகியாம் கிளியோபட்ராவின் கிரீடத்தைஅலங்கரித்தது என்பதை அறியும்போது கொஞ்சம் சிலாகிப்பாகத் தான் இருக்கிறது.
கொற்கை முத்துக்கள்: 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே செல்வ செழிப்பு மிக்க நாகரீக வளர்ச்சி அடைந்த தமிழ்சமூகம் வாழ்ந்ததற்கான வரலாற்றுச்சான்று கொற்கையில் கண்டறியப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழ் குடிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும் புது உத்வேகத்தையும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு புதிய கருதுகோள்களையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ் குடிகளின் வாழ்விடப் பகுதிகளை தோண்ட தோண்ட இன்னும் எத்தனை ஆயிரம் ஆச்சரியங்கள் காத்திருக்கிறதோ என்று உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர்,‘வால் முளைத்த பட்டம்’புத்தக ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி; குலமங்கலம், மதுரை மாவட்டம்; தொடர்புக்கு: amuthajeyaseelan06@gmail.com