அன்றைய தினம் அறிவியல் பாடவேளை. ஒவ்வொரு முறை தேர்வுகள்முடிந்த பின்னர் மதிப்பெண்கள் கொடுக்கும்போது, வகுப்பறையில் மிகப்பெரிய நிசப்தமும், அமைதியும்இருக்கும். அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மகிழ்ச்சியால் துள்ளுவர்.
மதிப்பெண்கள் குறைவாக எடுத்தமாணவர்கள் சற்றே சோர்வாக காணப்படுவார்கள். நாம் எவ்வளவுதான் உற்சாகப்படுத்தினாலும் கூட அவர்களை தேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் பிடிக்கும். தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் வகுப்பறையில் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதற்கான மாற்று வழி என்னதான் என்பதை யோசித்தேன்.
பல்வேறு இடங்களில் ஓபன் புக் எக்ஸாம் (open book exam) நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். ஏன் நம்முடைய மாணவர்களுக்கும் அந்த மாதிரி "ஓபன் புக் எக்ஸாம்" வைத்தால் எப்படி இருக்கும் என்று பரிசோதிக்க ஆசைப்பட்டேன். அதன்படி ஒருநாள் திட்டமிட்டேன். தேர்வுக்கு முன்னாள் அனைத்து மாணவர்களுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. நாளைய தேர்வுக்கு நீங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டாம். புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்று அறிவித்தேன். மாணவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.
மறுநாள் வினாத்தாள்களை மாணவர்கள் கையில் கொடுத்தேன். ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும் என்று அறிவித்தேன். மாணவர்களும் ஆர்வத்தோடு புத்தகங்களை புரட்டி கேள்விகளுக்கான பதிலை தேடிப்பிடித்து எழுத ஆரம்பித்தார்கள். அவர்களை எப்போதுமே தேர்வு எழுதும் இடத்தில் அதிக தொந்தரவு செய்வதில்லை. சுதந்திரமாய் எழுதட்டும் என விட்டுவிடுவேன். நேரம் ஓடியது, தேர்வு முடிக்கும் நேரமும் வந்தது.
வழக்கமாக சிரமத்தோடு தேர்வை எதிர்நோக்கக்கூடிய மாணவர்களை நோக்கி நடந்தேன். தேர்வு தொடங்கும்போது இருந்த உற்சாகமும் முகமலர்ச்சியும் இப்போது இல்லை. எனக்கோ மிகுந்த ஆச்சரியம். புத்தகத்தைப் பார்த்துத் தானே தேர்வு எழுத சொன்னேன்.
எதற்கு இவர்கள் வருத்தத்தோடு இருக்கிறார்கள் என்று என்னுள் கேள்வி எழுந்தது. ஒரு தம்பியின் அருகில் சென்று கேட்டேன். புத்தகத்தைப் பார்த்துத் தானே தேர்வு எழுதச் சொன்னேன். ஏன் கவலையா இருக்கிற தம்பி என்று கேட்டபோது, அந்த மாணவன் பதில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சார், உங்கள் அறிவிப்பு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் நானும்ஒவ்வொரு கேள்விக்கான விடையைத் தேடித் தேடி பக்கம் பக்கமா புரட்டினது தான் மிச்சம். ஒரு பதிலைக் கண்டுபிடிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அஞ்சு கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கிறதுக்குள்ள ஒரு மணி நேரம் ஓடிப்போச்சு.
பேசாம புத்தகத்தை பார்க்காமல் எழுதி இருந்தால்கூட எல்லா கேள்விக்கும் ஏதாவது கொஞ்சம் பதில் எழுதி இருப்பேன் என்று மாணவர்கள் கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என் கனவு தகர்ந்தது. அப்போதுதான் நினைத்தேன். நம்மால் சிறப்புஎன எண்ணப்படும் செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் ஏதோ ஒரு விதத்தில்மாணவர்களை சென்றடைவதிலும்மாணவர்கள் ஈடுபடுவதிலும் சிரமம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
வெற்றியானாலும் தோல்வியானாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆசிரியருக்கும் மாணவருக்கும் வேண்டும். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் நம்முள் எழவேண்டியது அடுத்த முயற்சிக்கு நாம் எப்படி பயணிப்பது என்பதே. வகுப்பறைகளில் எந்நேரமும் ஆசிரியர்களே வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வகுப்பறையில் மாணவர்களிடம் தோற்பதும் கூட ஒரு விதத்தில் சுகமே.உற்சாகமான வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது இயல்பே. தோல்வியைக் கண்டு துவளாமல் அதனை வென்றெடுப்பதில் ஆசிரியர் மற்றும் மாணவரின் முயற்சி முக்கியமானது.
- கட்டுரையாளர், தலைமையாசிரியர், ஆர்.சி.தொடக்கப்பள்ளி, மணியம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.