குழந்தைகளின் மனம் குதூகலிக்கும் தன்மை உடையது. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே வரவேற்கக்கூடிய மென்மை மிகுந்தவர்கள். சின்னஞ்சிறு பொம்மை உருவங்களில் கூட முழுவதுமாக தன்னைக் கரைத்துக் கொள்ளும் குழந்தைகள் உலகம் மகிழ்ச்சி நிறைந்தது.
தலையசைக்க தலையசைத்து, கண்சிமிட்ட கண்சிமிட்டி, பெற்றோர் களின் தோள்களில் வலம் வந்து உலகமே பெற்றோராகிப்போன குழந்தைகளுக்குப் பள்ளிச் சூழல்முற்றிலும் மாறுபட்டது. முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்து அவர்கள் சந்திக்கும் முதல் சமூகம் பள்ளி. வேற்று மனிதர் ஆசிரியர். எல்லோருமே புதிய மனிதர்கள், புதிய இடம். ஓரிடத்தில் அவர்கள் அமர்தல் என்பதும் புதிய முயற்சி.
அவர்களுக்கென புத்தகப் பை, சிற்றுண்டிப் பை என எல்லாமே புதிய உணர்வு. வகுப்பறையில் நிகழும் ஆசிரியரின் கண்டிப்பு, நல்வழிப்படுத்தும் முறை, நண்பர்களுடன் பழகுதல் என எல்லாமே புதிய சூழல். பெற்றோர்கள் நல்ல நட்பையும், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யும் அவசியத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளன. நாட்கள் நகரும் போது வகுப்பறைச் சுதந்திரம் இயல்பாகவே குழந்தைகள் வசப்படுகின்றன.
அமைதியாக இருப்பவர்கள், எதிர்த்துப் பேசுபவர்கள், பயந்து ஒதுங்குபவர்கள், கூர்ந்து கவனிப்பவர்கள், கவனமே இல்லாதவர்கள் என வெவ்வேறாக இருப்பது இயற்கை தானே. குழந்தைகளை நமக்குள் வசப்படுத்தும் மந்திரச் சொல் ‘அன்பு’. அன்பை ஆசிரியர்களும் பெற்றோரும் செலுத்தும்போது அறிவுத் தெளிவு அடைகிறார்கள்.
குழைந்த களிமண்ணால் பொருள்கள் செய்யும் நுண்கலை போன்று குழந்தைகள் நம் கைவசப் படுகிறார்கள். நம் வகுப்பறையும், உரையாடல்களும் எதை நோக்கிச் செல்கிறது. குழந்தைகளை நட்புற வோடுக் கையாள்வது கலை.
வகுப்பறை என்பது பல தரப்பட்ட வண்ணக் கலவைகள் நிறைந்தது. எல்லா வண்ணங்களும் வித்தியாசமானவை, ஆனால் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு உடையவை. பல வண்ணங்களை ஒன்றிணைத்து வண்ணக் கோலமிட முயல்வதே நம் சிந்தனையாக இருக்க வேண்டும். வகுப்பறைக்குள் இருக்கும் எல்லா மாணவர்களின் கைவிரல் பிடித்து மெல்ல மேலேற்றுவோம். குழந்தை மனங்களை வாசித்து நேசிப்போம்.தூரிகையைக் கையில் எடுப்போம். அன்பு கலந்து வண்ணம் தீட்டுவோம்.
- கட்டுரையாளர் எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.