பாலத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். உத்திரப் பாலம் [Beam Bridge], நீள்வட்ட வளைவுப் பாலம் [Arch Bridge], ஊஞ்சல் அல்லது தொங்கு பாலம் [Suspension], ஒற்றைப்பிடி நெம்பு பாலம் [Cantilever Bridge], முறுக்கு நாண் பாலம் [Cable Stayed Bridge] ஆகும்.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். பொறியாளர் ஸ்ட்ராஸ், கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார். இந்த பாலத்தை 1933-ல்கட்ட தொடங்கினார்.
வலுவான கயிற்றை இருமுனைகளிலும் கட்டியோ அல்லது இரு கம்பங்களில் முடிச்சிகளிட்டோ தொங்கவிட்டு, துணிகளைக் காயப் போடுகிறோம். அதே சூத்திரம்தான் தொங்கு பாலத்தின் அமைப்பில் கையாளப்படுகிறது. ஆழமாய் கடலில் ஊன்றிய கான்கிரீட் தூண் மீது இணைக்கப்பட்டு, இரண்டு உயர்ந்த இரும்புக் கோபுரங்களில் கம்பிகள் தொங்கும்.
அவற்றில் செங்குத்தாய் இணைந்த இரும்புக் கம்பி நாண்கள் பாலத்தைச் சுமக்கும். பொன்வாயில் பாலத்தின் மொத்த நீளம் 6450 அடி. ஒவ்வொரு பக்கத் தட்டின் நீளம் 1125 அடி. நீளத்துடன் கடல் மட்டத்துக்கு 220 அடி உயரத்தில் அமைக்கபட்டது. அமெரிக்க ராணுவக் கேப்டன் ஜான் ஃபிரிமான்ட் 1846-ல் ‘பொன்வாயில் நீர்ச்சந்தி' என்று பெயரிட்டார்.
விபத்துகளிலிருந்து வீரநடை: 1937 மே 27-ல் பொன்வாயில் பாலம் கோலாகலமாக திறக்கப்பட்டது. கட்டமைப்பு வேலைகள் நடந்து வந்த போது, 19 பணியாளர்கள் தவறி விழுந்தனர். ஆனால் ‘பாதுகாப்பு வலை' கீழே விரிக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர். இவர்களின் பெயர்கள் ‘பாதி வழி நரகம் சென்றவர் குழு' [Halfway-to-Hell Club] என்னும் பட்டியலில் பதிவு செய்தனர்.
1951 டிசம்பரில் 70 மைல் வேகத்தில் புயல் அடிக்கப் போவதாக காலநிலை அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுத்தன. மூன்று மணி நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாலத்தின் நுழை வாசல்கள் மூடப்பட்டன. கடுமையாக தாக்கிய புயலால் 24 அடி உயரத்திற்கு பாலம் ஊஞ்சல் ஆடியது. சிறிய பழுதுகளுடன் பாலம் தப்பியது.
புயல்களும், அலைகளும், பூகம்பங்களும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிகளை அடிக்கடித் தாக்குவதால், பொறியாளர்களும், பராமரிப்புப் பணியாளர்களும் இந்த பாலத்தை தினந்தோறும் கண்காணித்துப் பழுதுகளை உடனடியாக சரி செய்து வருகிறார்கள்.