சின்னஞ்சிறு பிள்ளைகளின் கற்பனை வளத்தினை எண்ணும் போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக காலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதால் காலை 7:55 க்கு பள்ளிக்கு வருவது எனதுவழக்கம். தொடக்கப்பள்ளி மாணவர்களும் சீக்கிரமே பள்ளிக்கு வந்து விடுவர்.
அவ்வாறான ஒரு நாளில் சில மாணவர்கள் என்னிடம் வந்து ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் மயங்கி விழுந்து விட்டதாகவும், அவனை தண்ணீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்துள்ளதாகவும் கூறினர். எழுந்தவுடன் அவன், “பயமாகஉள்ளது; பட்டாசு என் தலையில் வெடித்து விடும் என்று பயமாக உள்ளது” என்று சொல்லி அழுவதாகக் கூறினர்.
பேய் இருக்கா? இல்லையா?: நான் அந்த மாணவனை எனது அலுவலக அறைக்கு அழைத்து வந்து அமைதிப்படுத்திய பின் அவனிடம் ஏன் பயமாக உள்ளது என்று விசாரித்தேன். அதற்கு அவன் நேற்று ‘‘நான் இரவு பேயைப் பார்த்தேன்’’ என்று கூறினான் அவனிடம், “பேய் என்று ஒன்று இல்லை; அப்படியே இருந்தாலும் நம்மை பாதுகாக்க கடவுள் இருக்கிறார் என்றேன்.’’
அம்மா சொன்னா கேட்கணும்: தொடர்ந்து அந்த சிறுவன் கூறுகையில், “போன வருடம் எங்க ஊரு திருவிழாவுல நான் எங்க அம்மா பேச்சைக் கேட்காமல் ராட்டினத்தில் ஏறினேன். அப்ப வாண வேடிக்கையிலிருந்து ஒரு வெடி வந்து என்னோட காலில் பட்டுருச்சு,” என்று சொல்லி நான்காம் வகுப்பு படிக்கும் போது நடந்த விஷயத்தைச் சொன்னான். “நான் எங்க அம்மா பேச்சை கேட்காமல் இருந்தது தப்பு தானே, அதனால தான் கருப்பு சாமி என் காலில் வெடிய வெடிக்க வச்சுட்டாரு! அதுல இருந்து எனக்கு வெடினாலே பயம்” என்றான்.
“நான் இருக்கிறேன் பயப்படாதே!” என்று சொல்லிவிட்டு இன்று கருப்புசாமி கோயிலுக்கு போய் சாமிகும்பிடு அவர் உன்னை பாத்துக்குவாரு என்று சொல்லி அவனை ஆறுதல்படுத்தினேன். இன்று ஒரு நாள் மட்டும் அவன் வீட்டுக்கு செல்வதற்கு அவனது வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தருவதாகவும் சொன்னேன். உடனே சரி என்று சொல்லி எனது அலுவலக அறையிலேயே உட்கார்ந்து இருந்தான். கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு எனக்கு பிரசாதம் கொண்டு வருவதாகவும் சொன்னான்.
ஒரு மணிநேரம்தான்: இது நடைபெற்று முடிந்ததும் எனது அலுவலக அறையில் இருந்த நூலகப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து அவனை வாசிக்கும்படி சொன்னேன். அவன் 12-வது படித்துமுடித்துவிட்டு காலேஜ் படிக்கும் போது தினமும் காலேஜ் முடித்துவிட்டு என்னை வந்து பார்க்க வருவதாகவும் கூறினான்.
இதனைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு மணி நேரம் மட்டுமே நான் எனது நேரத்தை அவனுக்கு செலவு செய்து அவன் சொன்னவற்றை பொறுமையாக கேட் டேன். அதற்கு இவ்வளவு பெரிய பரிசா என்று ஆச்சரியமாக இருந்தது.
தற்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அந்த மாணவனின் பெயர் கிரிஸ்வந்த். அவன் கீழக்கு யில் குடி என்னும் கிராமத்தில் இருந்து எங்களது பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனது வகுப்பு ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இதனைப் பற்றி பகிர்ந்து கொண் டேன். பள்ளியில் நடக்கும் தேர் விற்கும் வீட்டுப் பாடங்களுக்கும் பயந்து அவன் இவ்வாறு கூறுவதாக அவர்கள் கூறினார்கள்.
இருந்தபோதிலும் பள்ளிக்கு வர மறுக்கும் மழலை உள்ளங்களின் கற்பனைக் கதைகளுக்கு செவி மடுத்தோமானால் நமது சொல் பேச்சு கேட்கும் மாணவச் செல்வங்களாக உருவாகிடுவர் என்பதை இந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.