சிறப்பு கட்டுரைகள்

11 ஒன்றியங்களில் சோதனை அடிப்படையில் நடைபெறுகிறது: 82 ஆயிரம் மாணவர்களை எட்டிப்பிடித்த வாசிப்பு இயக்கம்

வி.மஞ்சுளா

சென்னை: குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட வாசிப்பு இயக்கம் 82 மாணவ, மாணவியரை எட்டிப்பிடித்துள்ளது.

குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், அவர்களை சுயமாக வாசிக்க வைக்கவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வாசிப்பு இயக்கத்தை தொடங்கியது. 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 914 அரசு பள்ளிகளில் பயிலும் 81 ஆயிரத்து 174 மாணவ,மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட கருத்தாளர்களைக் கொண்டு வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு 53 சின்னஞ்சிறு புத்தகங்கள் தமிழ்நாடு அரசால்அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

எளிய சொற்களில் அழகிய வண்ணப் படங்களுடன் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் வாசிப்பு திறனை ஒட்டி புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லும் வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில், வாசிப்பு இயக்கத்தைத் தனதுநூலக பாடவேளையின் போது குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 380 ஆசிரியர்கள் தாமாக முன்வந்து அதற்கான பயிற்சி பெற்று களம் இறங்கியிருப்பது தனிச்சிறப்பு.

உரத்த வாசிப்பு, கூட்டு வாசிப்பு, தனி வாசிப்பு, கதை சொல்லுதல், நாடகம் ஆக்குதல், வாசிப்பும் காட்சியும் என பல்வேறு வடிவங்களை உருவாக்கி அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துவதன் மூலம் வாசிப்பை குழந்தைகள் நேசிக்க செய்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளையே கதைசொல்லிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வாசிக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகள் படைப்பாளி களாக மாறுவதோடு அவர்களைக் கொண்டு வாசிப்பு திருவிழாக்களை பள்ளியில் நடத்துவதற்கான திட்டமும் உள்ளது. பேச்சுக்கான முற்றம் (மேடை), உரையாடல் முற்றம், கைவினைப் பொருட்களுக்கான முற்றம், இசைக்கான முற்றம், எழுதுவதற்கான முற்றம், நடிப்புக்கான முற்றம், கையெழுத்துக்கான முற்றம், ஓவியத்திற்கான முற்றம் என பட்டியலிட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் சூழலுக்கு ஏற்றார் போல் புதிய முற்றங்களை அமைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதை தொடர் நிகழ்வாக செய்துவருகின்றனர். குறிப்பாக தலைமைப்பண்பு, பேச்சாற்றல், மனித உறவுத்திறன்கள், தீர்வு காணும் திறன்கள், பன்மையை ஏற்றுக்கொள்ளல் போன்ற திறன்கள் வளர்வதைக் காண முடிகிறது.

உரையாடல் வகுப்பறைகளால் பிடிவாதமற்ற தன்மை, இணைந்து நிற்கும் தன்மை, பிறரை மதிக்க கூடிய போக்கு, ஆராய்ச்சி மனப்பான்மை போன்ற பல்வேறு நற்பண்புகளும் வளர்கின்றன. குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தைத் தாண்டி விவாதிக்கவும் பொருள் குறித்து உரையாடவும் வாழ்வியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் தன்னார்வமிக்க ஆசிரியர்கள் உறுதி எடுத்துள்ளனர். ஆசிரியர்கள், தன்னார்வலர்களின் இத்தகைய முன்னெடுப்பால் வகுப்பறைகள் மகிழ்ச்சியால் திளைக்கும் காலம்வெகுதூரத்தில் இல்லை. குழந்தைகளின் வாசிப்பு கலாச்சாரம் பரவட்டும்.

- கட்டுரையாளர்: மாநில ஒருங்கிணைப்பாளர் வாசிப்பு இயக்கம்

SCROLL FOR NEXT