தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலி (TNSED) மூலம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த செயலியில் கண்கள் குறித்து 4 கேள்விகள், உடல் அளவீடுகள் குறித்த 6 கேள்விகள், சுகாதாரப் பரிசோதனை குறித்து 21 கேள்விகள் என 31 கேள்விகள் கேட்கப்பட்டன.
உடல் அளவீடுகள் பகுதியில் ஒவ்வொரு குழந்தையின் தோள்பட்டை அளவு பாதத்தின் அளவு, இடுப்பின் சுற்றளவு, உயரம், எடை என ஒவ்வொரு குழந்தையின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது 4 ,5-ம்வகுப்பு மாணவர்களுக்கு நீட்டல் அளவைகள் குறித்த பாடப்பகுதி இருப்பது நினைவுக்கு வந்தது.
பாடமும் கணக்கீடும்: அப்பாடப் பகுதியையும் இந்தக் கணக்கீட்டையும் இணைக்கும் விதத்தில் ஒரு செயல்பாட்டை உருவாக்க எண்ணி ”மெட்ரிக் மேளாவை ”நடத்த திட்டமிட்டோம். மெட்ரிக் மேளா என்பது மெட்ரிக் அளவீடுகளை செயல்பாடுகளின் மூலம் செய்து கற்றுக்கொள்வது ஆகும்.
‘மெட்ரிக் மேளாவை’ நடத்தும் முன்பாக அளவீடுகள் குறித்தும், அளக்கும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு அளவை எடுப்பதற்கும் குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு அவற்றை எப்படி பதிவு செய்வது என்ற விபரங்கள் கொடுக்கப்பட்டன. எடை பார்க்கும் எந்திரம், அளவுகோல் மற்றும் அளவு நாடா வழங்கப்பட்டு எவ்வாறு அளவு எடுக்க வேண்டும் என்றும் செய்து காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக மாணவர்களிடம் சென்று அளவீடுகளை செய்து அதனை தனி பேப்பரில் எழுதிக் கொடுக்கச் செய்தோம்.
மிகப்பெரிய சலனம்: இந்த நிகழ்வு வகுப்பறையில் ஒருமிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியதுடன் ஒரு வித்தியாசமான நிகழ்வாகவும் அமைந்தது. கொஞ்சம் விளையாட்டு, ஓரளவு செயல்பாடு என சேர்ந்து கற்கும் வகையிலும் இந்த நிகழ்வு செயல்பாடு அமைந்திருந்தது. குழந்தைகளும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். சென்டிமீட்டர் அளவுகள் அதாவது நீட்டல் அளவை மற்றும் நிறுத்தல் அளவை குறித்த விவரங்களை நேரில் செய்து பார்த்தது அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
அதையும் தாண்டி உடல் சார்ந்தவிஷயங்களை உற்று நோக்கும்போது பற்கள் மற்றும் பாதுகாப்பு விசயங்களில் ஒவ்வொரு குழந்தையின் பற்களையும் பார்த்து ஆய்வு செய்து அதையும் பதிவிட்டனர். ஒரு செவிலியர் செய்யும் வேலையை தாங்கள் செய்து பார்த்ததில் ஆர்வம் கொப்பளித்தது. ஒருவேளை இந்த ஆய்வுகள் அரசின் பதிவுகளாக இருக்கும் நிலை மாறி பள்ளியில் உள்ள மாணவர்களில் அதிகமான குழந்தைகள் பல் சொத்தை இருப்பதை கண்டறிவதற்குகூட இது வாய்ப்பாக அமைந்தது.
உற்சாகமாய் கற்றல்: இப்படியாக செலவிடப்பட்ட அந்த ஒரு மணி நேரம் குழந்தைகள் உற்சாகமாய் கற்பதற்கான ஒரு செயல்பாடாகவும் அதைத் தாண்டி அவர்களே சிறந்த செயல்பாட்டாளராகவும் மாறிய விதம் மன நிறைவைத் தந்தது. வரும்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று குழந்தைகள் விரும்பினர். அப்படியே குழந்தைகள் அளந்த விஷயங்களை பதிவு செய்யாமல்.
ஆசிரியர்களும் அதனை சரி பார்த்து பின்னர் பதிவேற்றம் செய்தனர். ஒரு விதத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் கூட மாணவர்களை இந்த செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடுத்தியது என்பது மறைமுகமாக குழந்தைகளை அளவீடுகள் குறித்த தகவல்களை புரிந்து கொள்வதற்கும் செய்து கற்றலுக்கான ஒரு நிகழ்வாகவும் இது மாறியது என்றால் மிகையாகாது. எனவே ஆசிரியர் ஒரு நிகழ்வை பயனுள்ள வழியில் மாற்றக்கூடிய விதத்தில் செயல்பட்டால் சுமைகள் கூட சுகமாகும்.
- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், ஆர்.சி.தொடக்கப்பள்ளி, மணியம்பட்டி, விருதுநகர் மாவட்டம்