ஒருவரின் பண்புகளுக்கு அடித்தளமிடக்கூடிய முக்கியமான காலம் இளமைப்பருவம், இவ்வயதில் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள நிறைய காரணிகள் உள்ளன. அதே நேரத்தில், தடுமாறவும், தடம்மாறவும் செய்கின்ற முக்கிய காரணிகளிலொன்று, எதிர்பாலினத்தவரின் கள்ளப்பணிவு எனும் மெய்யற்ற கனிவான சொற்களும், பணிவான செயல்களுமாகும்.
இந்த கள்ளப்பணிவு (போலி காதல்) பலரிடமிருந்து பல விதங்களில் வெளிப்பட்டாலும், இளம்வயதில், காதல் எனும் போர்வைக்குள் மறைந்து தொற்றிக்கொள்ளும் போது, ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம்.
இன்றைய காலக்கட்டத்தில், எதிர்பாலினத்தவருடன் நெருங்கிப் பழகவாய்ப்புகள் அதிகமுள்ளதால், காதல்இலகுவாக அவர்களுக்குள் ஐக்கியமா கிறது.
மற்றவர்கள் காதலிப்பதைப் பார்த்து,தானும் காதலிக்க வேண்டுமெனும் மனப்பான்மை, உன்னை எவரும்அல்லது நீ யாரையும் காதலிக்கவில்லையா என்று மற்ற காதலர்கள்கேலிசெய்தல், எவரும் காதலிக்கவில்லையென்றால், தான் அழகற்றவர் என்ற தாழ்வுமனப்பான்மையால் ஏற்படும் மன உளைச்சல் போன்ற ஏதோவொரு காரணத்தினாலும், காதலிப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்கிறார்கள். உண்மைக் காதலெனில் வாழ்வின் மகிழ்ச்சிக்கு வித்திடும். பொய்மைக் காதலெனில் வாழ்வின் மகிழ்ச்சியை அழிக்கும்.
காதலிக்கும்போது வெளிப்படும் சொல்லும் செயலும், கனிவும், பணிவும் நிரம்பியதாக இருக்கும். இவை, உண்மையான அன்பா அல்லது கள்ளத்தனமா என்பதையறியும் பக்குவமும், முதிர்ச்சியும் பொதுவாக இளம்வயதினரிடம் இருப்பதில்லை. இத்தன்மையே, பலரது வாழ்வு பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்குக் காரணமாகிறது. பொய்மைக் காதலின் மிகப்பெரிய ஆயுதம் கள்ளப்பணிவு. இதன் நோக்கம் காமமும் பணம் பறித்தலும் தான்.
பொய்மைக் காதலர்களின் உள்ளக்கிடக்கை என்னவென்று அறியமுடியாத மறைபொருளாக இருப்பதால், பணிவும் கனிவும் எப்படிப்பட்டது என அறியாமல், தங்கள் மீது அவர்கள் செலுத்தும் பேரன்பு என்றெண்ணியும், தங்கள் வீட்டில் அன்பு கிடைக்காததால், அவர்களின் பொய்யன்பில் மயங்கியும் சிலர் நிலைதடுமாறி ஏமாறுகிறார்கள். பழகும் விதம் மாறும் போதுதான், அவர்களின் உண்மை நோக்கம் தெரிய வருகிறது.
உண்மையன்பிற்கும் பொய்யன்பிற்கும் உள்ள வேற்றுமையை அறிய முடிந்தால், ஏமாறுவது குறையும். ஆனால், அதனை எவ்வாறறிவது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. ஆகையால், சிக்கலும் துன்பமும் ஏற்படாதிருக்க பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பழகுதல் பயனளிக் கும்.
வாழ்வின் குறிக்கோளையடைய தடையான கவனச்சிதறல்களை மனவுறுதியுடன் தவிர்க்க வேண்டும். ஒரு செயலின் விளைவு, தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ துன்பம் விளைவிக்காத ஒன்றா என்பதை 30 நொடிகள் விழிப்புடன் சிந்தித்தறிந்து செயல்படுதல் நலம். தன்னையும், குடும்பத்தினரையும் துன்பமடைய செய்யும் தவறைத் தவிர்க்க, பெண்கள் ஆண்களிடமும், ஆண்கள் பெண்களிடமும் வரையறுக் கப்பட்ட அளவுடன் நட்பாய் பழகுவது உத்தமம்.
ஒருவரின் குடும்பச்சூழல், வளரும் ஊர், பணவலிமை, மனவலிமை மற்றும் மனப்பான்மையைப் பொறுத்து வரையறையளவு வேறுபடும். ஆகையால் அனைவரும் வரையறையள வினை தாங்களாகவே முடிவு செய்து கொள்ளுதல் பயனளிக்கும்.
வரையறுக்கப்பட்ட அளவினை எந்தச்சூழலிலும் தளர்த்தாத மனவுறுதியுடன் கடைப்பிடித்தால், பொய்மைக் காதலர் தன் கள்ளப்பணிவு எண்ணம் நிறைவேறாது என்று எண்ணி ஒதுங்கிவிடுவார். இதனால், ஏற்படவிருந்த சிக்கல்களும் துன்பங்களும் தவிர்க்கப்படும்.
கள்ளப்பணிவு, பெரியவர்கள் வாழ்விலும், பல வடிவில் முகமூடி அணிந்துவந்து ஏமாற்றும். பெரியவர்களேகள்ளப்பணிவை அறிந்து உணரமுடியாமல் ஏமாற்றமடையும்போது, மாண வர்கள் மற்றும் இளம்வயதினர், கள்ளப்பணிவு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை அறிந்துணரும் வயதும் பக்குவமும் வரும்வரையிலும் அதற்கு பிறகும், கவனச்சிதறல்களை தவிர்க்க, விழிப்போடு பழக, விளைவு அறிந்து செயல்படக் கற்றறிந்து பழகி, அவற்றை வாழ்வின்நடைமுறையாக்கிக் கொள்வது, துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உதவும் சிறந்த வழிகளாக இருக்கும்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் புத்தகங்களின் ஆசிரியர், சென்னை