சிறப்பு கட்டுரைகள்

மாணவர்களின் 2.50 லட்சம் ஆடியோ பதிவுகள்: வாசிப்பு திறனை வளர்க்கும் இணையவழி கல்வி வானொலி

டி.செல்வகுமார்

சென்னை: மாணவர்களின் வாசிப்பு உள்ளிட்ட திறன்களை வளர்ப்பதில் இணையவழி கல்வி வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஆன்-லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால், பல மாணவர்கள், பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை. கிராமங்களில் நெட்வொர் கிடைப் பதில் சிரமம். இருப்பினும் ஆசிரி யர்களின் விடா முயற்சியால் ஆன்-லைன் கல்வி மாணவர்களுக்கு பயனளித்தது.

சாதாரண போன் போதும்: இந்நிலையில்தான் இணையவழி கல்வி வானொலி என்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைக் கேட்க ஸ்மார்ட் போன் தேவையில்லை. மொபைல் டேட்டா உள்ள சாதாரண பட்டன் போன் போதுமானது. ஆசிரியர்கள் இணையவழி கல்வி வானொலிக்கான www.kalviradio.com என்ற லிங்கை மாணவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்எஸ்.அல்லது வாட்ஸ் அப் வழியாக அனுப்புகின்றனர். சிறிய யூஆர் எல்-ஐ பயன்படுத்தி அனைத்து பாடங்களையும் அந்தந்த பாட ஆசிரியர்கள் நடத்துவதைப் போலவே கேட்கலாம்.

வகுப்பறை சூழல்: பாடங்களைக் கேட்டுக் கொண்டே கற்பதால் வகுப்பறை சூழ்நிலையும் நிலவுகிறது. மாணவர்கள் எங்கேயும், எப்போதும் இணையவழி கல்வி வானொலி வழியே சுயமாக பாடங்களை கற்கலாம். கரோனா காலத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் என ஒலிபரப்பான இணையவழி கல்வி வானொலியை இப்போது 24 மணி நேரமும் கேட்க முடிகிறது.

அனைத்துப் பாடங்கள் மட்டுமில்லாமல், 1 முதல் 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு பின்னால் உள்ள வினா, விடை, சொல்வதைக் கேட்டு எழுதுவது, திருக்குறள், பழமொழிகள், விடுகதைகள், கதைகள், பொன் மொழிகள், அறிஞர்கள் வரலாறு, தன்னம்பிக்கையை வளர்க்கும் சொற்பொழிவு, கல்வியாளர்கள் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் போன்ற விழுமியக் கல்வியும் இந்த வானொலியில் ஒலிபரப்பாவது சிறப்பு.

20 நிமிட ஒலிப்பதிவு: 15 முதல் 20 நிமிடம் வரை பதிவு செய்யப்பட்ட பாடத்தை கேட்கும் முன்பு முன்னுரையுடன் ஒலிபரப்பு தொடங்குகிறது. மாணவர்கள் கையில் பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது சந்தேகம் எழுந்தால் அதை பள்ளியில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறது அந்த முன்னுரை. மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது இந்த வானொலி. அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை பேசி பதிவிடலாம். பார்த்தும் பேசலாம், பார்க்காமலும் பேசலாம்.

அவை பதிவு செய்யப்பட்டு இணைய வழி கல்வி வானொலியில் ஒலிபரப்பாகும். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாணவர்கள் 2 லட்சத்து 50-க்கும் மேற்பட்ட ஆடியோக்களை பதிவிட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள்தான்.

இதுகுறித்து இணையவழி கல்வி வானொலியை அறிமுகம் செய்த கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா கூறியதாவது:கரோனா காலத்தில் வகுப்பறையில் நேரடியாக பாடம் நடந்த முடியாத சூழலில் அதுபோன்ற சூழலில் பாடம் நடத்த முடியுமா என்ற சிந்தித்தபோது உதயமானதுதான் இணையவழி கல்வி வானொலி. 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கினேன். எங்கள் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பயன்படுத்தியதால் மற்ற அரசு பள்ளி ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறி இணையவழி கல்வி வானொலி வழியே பாடம் நடத்த ஊக்குவித்தேன்.

இப்படி படிப்படியாக இதன் சேவை விரிவடைந்தது. இப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணையவழி கல்வி வானொலிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மேம்படும் படைப்பாற்றல் இரண்டரை ஆண்டுகளில் சுமார் 2.50 லட்சம் ஆடியோக்களையும் பதிவிட்டுள்ளனர். இந்த வானொலி வழியாக மாணவர்கள் படிப்பதுடன், வாசிப்பு திறன், பேச்சாற்றல், படைப்பாற்றல், மனப்பாட சக்தியை வளர்த் துக் கொள்கின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT