தமிழ்நாட்டைச் (அன்றைய மதராஸ் மாகாணம்) சேர்ந்த சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962இல் பொறுப்பேற்றார்.
நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1952 முதல் 1962 வரை இரண்டு முறை பதவிவகித்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத்தலைவராக இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக இரண்டு முறை குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது.
நேருவின் விருப்பம்: 1957இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே டாக்டர் ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆர்வம் காட்டினார். ஆனால், அந்தத் தேர்தலில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மீண்டும் போட்டியிட விரும்பியதால், ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாகக் குடியரசு துணை தலைவராக்கப்பட்டார்.
எனவே, இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962இல் நடைபெற்றபோது ஜவாஹர்லால் நேரு விரும்பியபடி, ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இத்தேர்தலில் ராதாகிருஷ்ணன் 5,53,067 வாக்கு மதிப்புகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் சௌத்ரி ஹரி ராம் 6,341 வாக்கு மதிப்புகளையும், ஜமுனா பிரசாத் திரிசுலியா 3,537 வாக்கு மதிப்புகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.
ஆசிரியர் தினம்: பதிவான மொத்த வாக்குகளில் 98.2 சதவீத வாக்குகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் பெற்றார். இதன்மூலம் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்தது. 1967 வரை இப்பதவியில் அவர்இருந்தார். அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 5 அன்றுஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.