‘இந்திய சினிமாவின் உலக முகம்’ என்னும் புகழ்மொழிக்கு முற்றிலும் பொருத்தமானவர் இயக்குநர் சத்யஜித் ராய். கொல்கத்தாவில் பிறந்த ராய், பொருளியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலை பயின்றார்.
ஜவாஹர்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’ நாவல் உள்ளிட்ட புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்தார். தன்மீது பெரிதும் தாக்கம் செலுத்திய‘பதேர் பாஞ்சாலி’ நாவலைத் திரைப்படமாக இயக்க முடிவுசெய்தார். கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையே. 1952இல் தொடங்கிய படம் 1955இல் வெளியானது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த துர்கா, அவளுடைய தம்பி அபு ஆகிய சிறாரின் கதையாக முன்வைக்கப்பட்ட இந்தப் படம் இந்திய கிராமங்களைப் பீடித்திருந்த வறுமையையும் வாழ்வில்எப்படியாவது முன்னேறிவிடுவதற்கான வரியவர்களின் ஏக்கத்தையும் பதிவுசெய்தது. வெளியான
போது இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் வசூலைக்குவித்த ‘பதேர் பாஞ்சாலி’ சிறந்த திரைப்படம், சிறந்த வங்கமொழித் திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசியவிருதைப் பெற்றது. பிரான்ஸின்கான் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு ‘சிறந்த மானுட ஆவணம்' என்னும் விருதைப் பெற்றது. இந்திய சினிமாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக்கல்லாகஎன்றென்றும் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
‘பதேர் பாஞ்சாலி’யின் தொடர்ச்சியாக ‘அபராஜிதோ’ (1956), ‘அபுர் சன்ஸார்’ (1959) ஆகிய இரண்டு படங்களை ராய் இயக்கினார். இவை ‘அபு டிரையாலஜி’ எனப்படுகின்றன.
இவை தவிர ‘தேவி’, ‘மஹாநகர்’, ‘சாருலதா’, ரவீந்திரநாத் தாகூரின் மூன்று சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘தீன் கன்யா’ உள்ளிட்டஅவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் உலகப் புகழ்பெற்றன. ராய் மரணமடைவதற்கு முன்1992இல் வாழ்நாள் சாதனைக்கான கெளரவ ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.