வீட்டில் பள்ளியில் பொது இடங்களில் ஒருவர் மீது கோபம் வந்துவிட்டால் கோபத்தில் ஏதாவது சொல்லி திட்டுவது வழக்கம். பல நேரங்களில் கோபம் வரும் போது சனியனே என்று திட்டுவது வழக்கில் உள்ளது.
கோபத்தில் திட்டுவதற்காக பயன் படுத்தப்படும் “சனியனே” என்ற வார்த்தை சனி கிரகத்தைக் குறித்தே சொல்லப்படுகிறது. சனி கிரகத்தைப் பற்றி முழுமையான உண்மைகளைத் தெரிந்து கொண்டால் ”சனியன்” என்றால் நீங்கள் சந்தோசம்தான் அடைவீர்கள்.
அழகான கோள்: சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் மிக அழகாகவும், தன்னைச் சுற்றிலும் ஒரு வளையத்தோடு வலம் வரும் ஒரே கோள் சனிக்கோள் ஆகும். மிகச் சிறந்த ஓவியர்களால் கூட வரைய முடியாத அழகான வண்ணங்களால் ஜொலிப்பது சனிக்கோள். வேறு எந்தக் கோள்களுக்கும் இல்லாத அழகும் அதிசயமும் சனிக்கோளுக்கு மட்டுமே உரியது.
சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகம் ஆகும். பூமியிலிருந்து மூன்றாவது இடத்தில் சனி உள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் இரண்டாவது பெரிய கிரகம் சனிதான். சனி வாயுக்களால் ஆன கோள் ஆகும். வியாழன் கிரகத்தைவிட கொஞ்சம் சிறியது.
இரவில் காணலாம்: சனிக்கோள் பூமியை போல் பல மடங்கு பெரியது . சனி கோளுக்குள் 764 பூமிகளை போட்டு அடைத்து விடலாம் என்றால் கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு பெரியது என்று. சனி கிரகத்தை வெறும் கண்களாலே பார்க்க முடியும். இது நட்சத்திரம் போல் மின்னாது சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியை பிரதிபலிப்பதால் இரவு வானில் சனியை கண்டுபிடிப்பது எளிது.
நாம் நினைப்பது போல் சனி கிரகம் உருண்டையானது அல்ல. இது ஒரு ஆரஞ்சு பழ வடிவத்தை கொண்டது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தை விட பத்து மடங்கு தூரத்தில் சனி கிரகம் உள்ளது. சனி மிக வேகமாக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
சனி கிரகத்தின் அடர்த்தி மிக மிகக் குறைவு. அதாவது நீரின் அடர்த்தியை விட குறைவானது தான். சனி கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற எடை குறைவான தனிமங்களே இருக்கின்றன. அதனால்தான் அடர்த்தி குறைவாக இருக்கிறது.
சனி கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையங்கள் திடமான பனிக்கட்டி பொருள்களால் ஆனது. ரோமானிய நாட்டில் சாட்டன் என்பது ஒரு அறுவடை கடவுள் எனக் கூறி வழிபட்டனர். கிரேக்கர்கள் சனியை இரவுசூரியன் என்று பெருமையுடன் கூறுகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சனிக் கிரகத்தை நம்மில் பலரும் எப்படி பார்க்கின்றனர் என்பதை கூறியே ஆக வேண்டும். ஒருவர் மற்றவரை திட்டும் போதுகூட ஏண்டா உனக்கு சனியன் புடிச்சிருக்கா ? போடா சனியனே! என்றெல்லாம் திட்டம் பேச்சுக்கள் இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன. நம்மில் பலருக்கும் சனிக் கோளின் செயல்பாடு கேடு விளைவிப்பதாகவே கருதப்படுகிறது. உண்மையில் அப்படி இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நாம் பார்த்தால் தெளிவாகும்.
நம் மீது சனிபார்வை பட்டால் ஆகாது என சொல்பவர்கள் மத்தியில், சனி கிரகம் மிகவும் குளிர்ச்சியான கிரகம் நம்மை அப்படி ஒன்றும் செய்துவிடாது என்ற கருத்தை நாம் தூக்கிப்பிடிக்க வேண்டும். அழகான குளிர்ச்சியான மிகவும் சிறப்பு வாய்ந்த கோளாக கருதப்படும் சனியை நாம்நேசிப்போம். இனிமேல் யாரும் சனியன்என்று சொன்னால் கூட கவலைப்பட வேண்டாம். சனி சிறப்பான கோள் தானே. நீங்களே சொல் லுங்கள்.