சிறப்பு கட்டுரைகள்

சுதந்திர சுடர்கள்: ஆசியப் போட்டியும் அப்பு யானையும்

மிது

டெல்லியில் 1982இல் இந்தியா நடத்திய ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் அழுத்தமாக பதிவானது. இந்தப் போட்டிகளின் நல்லெண்ணச் சின்னமான அப்பு யானை நாடெங்கிலும் புகழ்பெற்றது.

1951இல் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்திய இந்தியா, 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வாய்ப்பைப் பெற்றது. இந்தப் போட்டியைப் புதிய மைதானத்தில் நடத்துவதற்காக ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் டெல்லியில் கட்டப்பட்டது. இப்போட்டிக்காக டெல்லி நகரம் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது அன்றைக்குப் பேசுபொருளானது. படகுப் போட்டிகள் மட்டும் மும்பை அருகே நடைபெற்றன.

1982 நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற இப்போட்டியில் 33 நாடுகளைச் சேர்ந்த 3,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் 74 ஆசியசாதனைகள் முறியடிக்கப்பட்டன.

1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவும் ஜப்பானும் ஆதிக்கம் செலுத்தின. இரு நாடுகளும் தலா 153 பதக்கங்களை வென்றன. இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி,25 வெண்கலம் என 57 பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையே பெற்றது. ஆனால், மிகச் சிறப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியதன் மூலம், ஆசிய நாடுகளின் இதயங்களை இந்தியா வென்றது.

இன்னொரு முக்கிய நிகழ்வாக, இந்தியாவில் முதன்முறையாக இந்தவிளையாட்டுப் போட்டி வண்ணத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப் போட்டிகளுக்கு முன்னதாக ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, ஆசியஒலிம்பிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின்கீழ் நடத்தப்பட்ட முதல் போட்டியாக டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டி அமைந்தது.

SCROLL FOR NEXT