அலைபேசி என்னும் மாய வலையில் சிக்கித் தவிக்கும் மாணவ சமுதாயம் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம். இன்றைய மாணவ சமுதாயத்தினரையும் 30 வருடத்திற்கு முந்தைய மாணவ சமுதாயத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தபோது விளைந்தது இந்தக் கட்டுரை.
30 வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் - மாணவர் உறவு என்றாலே மிகுந்த மரியாதை கலந்த அன்பாக இருக்கும். எங்காவது தெருக்களில் நடந்து செல்லும் போது நேருக்கு நேராக ஆசிரியரைச் சந்தித்துவிட்டால் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்ன மாணவர் சமுதாயமாகவே என் நினைவில் உள்ளது மாணவப் பருவம்.
இன்றைய சூழலில் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையாக செல்ல வேண்டிய மாணவர்களின் முதுகின் வடிவமைப்பு கூனிக்குறுகிப் போனதற்கு காரணமும் அலைபேசியாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
குனிந்த தலை நிமிராமல் படித்த காலம் போய், குனிந்த தலையும் தொடுதிரையை தடவுகின்ற விரல்களுமாக மாறிவிட்டனர் மாணவர்கள். இதில் மாணவர்களை மட்டும் குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை.இரண்டு வயது குழந்தை அழுதால் அழுகையை நிறுத்துவதற்கு விளையாட்டு பொம்மைகளும், பால் பாட்டில்களும் கொடுக்கப்பட்டது அந்தக் காலம்.
ஆனால், இன்று அழுகின்ற குழந்தையின் கைகளில் கொடுக்கப்படுவது அலைபேசியும், டிவி ரிமோட்டும் தான். இரண்டு வயது முதலே அலைபேசியின் செயலிகளுக்கும், தொலைக்காட்சியின் அலை வரிசைக்கும் பழக்கப்படுத்தியது யார்? என்று சிந்தித்திட வேண்டும். பள்ளியில் படிக்கின்ற பிள்ளைக்கு அலைபேசியின் தேவைதான் என்ன? என்பதை பெற்றோர்கள் தீர விசாரித்த பின் முடிவு செய்யலாம்.
அலைபேசியின் அலைக்கழிப்பில் சிக்கித் திணறும் மாணவனுக்கு காத்திருப்பது அடுத்த சவாலாக குடிகார அப்பாவின் அட்டகாசத்தால் சிதறுண்டு கிடக்கும் குடும்பச் சூழல். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, “இன்று என் மகன் பள்ளிக்கு வந்திருக்கிறானா?” என்று கேட்டார். “ஏன் இவ்வாறு விசாரிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு நோய்வாய்ப்பட்டு இருந்தநிலையிலும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததன் கணவனிடம் சண்டையிட்டுவிட்டு தனது தாயின்வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறினார். கல்வியில் எவ்வாறு ஆர்வம் செலுத்த முடியும் அந்த மனநிலையில்?
ஒரு மாணவனின் கல்வித் தரம் மேம்படுவது ஆசிரியர் ஒருவரால் நிகழ்த்த முடிகின்ற சாகசசெயல் அல்ல. இதில் பெற்றோருக்கும் சரிநிகரான பங்கு உண்டு. மாணவன் சந்திக்கின்ற சவால்களை எதிர்கொண்டு சரியான முடிவுகளை தீர்மானம் செய்திடுவதற்கு ஆசிரியரால் வழிகாட்ட முடியும். ஆனால் அதேநேரத்தில் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பும் அவசியம். லட்சியக் கனவுகளோடு பயணிக்கும் மாணவசமுதாயத்தினை உதவிக்கரம் நீட்டி மேலே உயர்த்திடும் ஆற்றல் ஆசிரியருக்கு உண்டு. அதே வேளையில் பெற்றோரின் பங்களிப்பும், புரிதலும் இருந்தால் மட்டுமே வெற்றி சிகரத்தை மாணவர் தொட்டிட செய்ய முடியும்.
- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை, மதுரை.