காஞ்சிபுரம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்களின் உடற்பயிற்சி வகுப்புகள் சாலையிலேயே நடைபெறுகின்றன. தற்காலிக இடத்தில் தேவையான தடுப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு, நிலம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், சின்ன வேப்பங்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இடநெருக்கடி இருப்பதால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புக்கு போதிய இடவசதியில்லை. எனவே, பள்ளியையொட்டி குளக்கரையில் அமைந்துள்ள 50 மீட்டர் நீளம் கொண்ட சாலையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உடற்பயிற்சி அளித்து வருகின்றனர். ஆனால், அச்சாலையில் உள்ளூர் மக்களின் சிறியளவிலான வாகன போக்குவரத்து உள்ளதால் உடற்பயிற்சியின் போது சாலையில் செல்லும் வாகனங்களால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனால், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாலையின் இருபுறமும் சைக்கிள்களை கொண்டு தடுப்புகள் அமைத்து, உடற் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சைக்கிள்களை அகற்றுமாறு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், மாணவர்களின் உடற்பயிற்சி வகுப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, அந்த சாலையில் பள்ளி நேரத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்கின்றனர். பள்ளி நேரத்தில் அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டாலும், வாகன ஓட்டிகள்பயன்படுத்த இரண்டு சாலைகள் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பள்ளிக்கு நிலம் ஒதுக்கும் வரையில் இந்த தற்காலிக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக உள்ளூரை சேர்ந்தபிரபாகரன் கூறும்போது, "மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு என்பது மிகவும் அவசியம். அதனால், தற்காலிகமாக குளக்கரையில் உள்ள குறிப்பிட்ட அச்சாலையில் பள்ளி செயல்படும்போது மட்டும், வாகனங்கள் செல்லாதவாறு தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேரிகாட்கள் அமைக்கலாம். இதன்மூலம், மாணவர்கள இடையூறு இன்றி உடற் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும், தற்காலிகமாக இச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தினால், அச்சாலையை பயன்படுத்துவோர் 50மீட்டர் தொலைவு மட்டுமே சுற்றிக்கொண்டு, அன்னை சத்யா சாலை மற்றும் சாலியர் தெரு வழியாக செல்லும் நிலை உள்ளதால், உள்ளூர் மக்களின் வாகன போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாணவர்களின் உடற் பயிற்சி வகுப்பினை கருத்தில் கொண்டு, நிலம் ஒதுக்கும் வரையில் தற்காலிமாக இதை நடை முறைப்படுத்த வேண்டும்" என்றார்.
அப்பகுதியின் கவுன்சிலரும், காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயருமான குமரகுருநாதன் கூறும்போது, "திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்யப்படும். பள்ளி நிர்வாகம் சார்பில் முறையாக மனு அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிக்கு நிலம் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் கூறும்போது, "உடற்பயிற்சி வகுப்புக்கு இடமில்லாததால் பள்ளியையொட்டி உள்ள சாலையில் பயிற்கு வகுப்பு நடத்தும் நிலை உள்ளது. வேறு சாலைகள் அருகிலேயே உள்ளதால், யாருக்கும் இடையூறு ஏற்படவில்லை. எனினும், தடுப்புகள் அமைத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமின்றி வகுப்புகளை நடத்த முடியும். அதனால், தடுப்புகள் அமைக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்" என்றார்.