அன்பு செல்வா,
அம்மாவின் அன்பு கடிதத்தை படித்திருப்பாய்! நானும் உனக்கு சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப படிக்கும்போதோ, கேட்கும் போதோ மனத்தில் பசுமரத்தாணி போல பதியும். எனவே, நல்லவற்றை தேடிப்படி! அவையத்து முந்தியிருக்கச் செய்வது தந்தையின் கடன். நல்ல கல்வியை அளிப்பதுடன் வாழ்க்கைக் கல்வியை சொல்லிக் கொடுப்பதும் என் கடமையாகும்.
உலகமே உள்ளங்கையில் இருக்கிறது. அறிவு வளர்வது போல் அல்லவைகளும் எளிதாய் நம்மை வந்தடைந்து விடுகின்றன. நல்லதும் கெட்டதும் கலந்தது தான் வாழ்க்கை. நல்லவற்றை தேர்ந்தெடுக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும். அதை மட்டும் நீ கற்றுக் கொண்டுவிட்டால் துன்பம் என்பது உனக்கில்லை. நீ திறன்மிக்கவனாக வளர வேண்டும். உன்னை உயர்த்தும் கல்வியை கருத்தூன்றிப் படித்தால் காலமும் உன் வசமாகும்.
போட்டிகள் நிறைந்த சூழலை வெல்ல பல்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். “வெந்ததைத் தின்று விதி வந்தால்மாள்வோம்" என்று வேடிக்கை மனிதராய் வாழ்ந்து விடக்கூடாது. கல்வியைவிட உன்னை அழகு செய்யும் பொருள் எதுவுமில்லை. எதை வேண்டுமானாலும் நீ படி! ஆனால் அதில் நீ முத்திரை பதி!
ஆர்வமுடன் சலியாமல் செய்யும் செயல் சிறப்பாய் வரும். படிப்பில் இருக்கும் கவனத்தை சிதற அடிக்கும் அல்லது திசை திருப்பும் விஷயங்களிலும், ஆட்களிடமும் விலகி இரு. நட்பு வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். நல்ல நண்பனை கவனமுடன் அறிந்து கொள். ஏனென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது திருவள்ளுவர் காலத்திலேயே "கூடா நட்பு" இருந்து இருக்கிறது.
மகாத்மா காந்திகூட சிறுவயதில் கூடா நட்புக்கு ஆளாகி இருக்கிறார். கெட்டவருடன் நட்பு கொண்டபோது "அவர் என்னைக் கெட்ட வழிக்கு இழுக்க முடியாது. அவர் தன்னைத் திருத்திக் கொண்டால் சிறந்தவர் ஆவார்” எனக் கூறிக் கொண்டு பழகினார். ஆனால், கெட்டவரிடம் இருந்து தீய பழக்கங்களை அவர் கற்றுக் கொண்டார். தீய பழக்கங்களை ஒரேயொரு நாளில் அவர் மேல் அந்த நண்பர் திணித்துவிடவில்லை.
பல தினங்களில் பல முறைகளில் படிப்படியாக வாதங்களின் மூலம் மண்டையில் ஏற்றிய விஷயமாகும். “மனிதனுக்கு கெட்ட குணங்கள் எளிதில் படிவது போல நல்ல குணங்கள் படியாது". எனவே, தீயவர்களை விட்டு விலகிச் செல். இளமையில் கருத்துடன் படித்தால் முதுமையில் சிறப்பாய் வாழலாம். கல்வி காலம் கடந்தும் நம் பெருமையை நிலை நிறுத்தும்.
“தக்கவை தழைத்தல்" என்பது இயற்கை விதி. வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்பு இருந்தால் தான் நீடித்து வாழ இயலும். மாறும் உலகின் தக்கவனாக அதாவது திறன் மிகுந்தவனாக நீ இருக்க வேண்டும். நாடு போற்றும் நல்வாழ்வு நீ வாழ வேண்டும். சிறந்த கல்வியை நீ கற்க வேண்டும். உன்னால் உலகம் பயனுற வேண்டும். நீயும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்துவாய் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தை முடிக்கின்றேன்.
இப்படிக்கு
உன் அன்பு அப்பா.
கட்டுரையாளர் நவபாரத் வித்யாலயா பள்ளி முதல்வர், இ.வெள்ளனூர், லால்குடி தாலுகா, திருச்சி மாவட்டம்.