சிறப்பு கட்டுரைகள்

சுற்றுச்சூழலை பாதிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள்

ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

மக்கள் பொருட்களை வாங்கும் போது இருக்கின்ற மகிழ்ச்சி அதன் பயன்பாடு முடிந்த பிறகு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்?

நவீன தொழில்நுட்ப உலகத்தில் பாட்டு கேட்க பயன்படுத்தும் இயர் போன் முதல் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் பயன்பாடற்று குப்பையில் வீசுகிறோம். அவை அனைத்தும் எலக்ட்ரானிக் கழிவுகளாக மாறுகிறது. நாள்தோறும் காய்கறி கழிவுகள், நெகிழி கழிவுகளை தாண்டி இன்று எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்துவருவது வேதனையளிக்கிறது.

“சுனாமி ஆப் இவேஸ்ட்” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டிற்கு 5 கோடி டன் எடையிலான எலக்ட்ரானிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தொலைக்காட்சி, கணிணி, லேப்டாப், கைபேசி, ஒயர்கள், பென்டிரைவ் என பட்டியல் நீள்கிறது.

ஒரு சில எலக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது என்பது மிக கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பொருட்களை சிறிய கோளாறுகள் இருந்தால் அதை சரி செய்து மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும். ப்ளாஸ்டிக், மெட்டல் உள்ளிட்டவற்றை தனியாக பிரித்து மறுசுழற்சியும் செய்ய முடிகிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை மக்கள் எரித்துவிடுகின்றனர். இவ்வாறு எரிப்பதனால் லெட், கேட்மியம், ப்ரோமியம், அத்துடன் நெகிழி உள்ளிட்ட வேதி பொருட்கள் வெளியேறி காற்றில் கலக்கிறது. இந்த காற்றை மனிதர்கள் சுவாசித்தால் சுவாசக்கோளாறு, நுரையீரல், கணையம், ரத்த நாளங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதாக கூறுகிறது மருத்துவத்துறை.

பெரிய நிறுவனங்கள் வணிக நோக்கத்திற்காக குறைவான ஆயுட்காலம் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மக்கள் தங்களால் முடிந்தவரை எலக்ட்ரானிக் பொருட் களை பழுது நீக்கி பயன்படுத்தினால் எலக்ட்ரானிக் கழிவுகள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. சுற்றுச் சூழலை எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்பதால் தான் எலக்ட்ரானிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ல் கொண்டுவரப்பட்டது.

SCROLL FOR NEXT