நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்று தொல்காப்பியர் கூறுவார். இந்த ஐந்தும் தான்உலக சுற்றுச்சூழலில் முக்கிய பங்காற்றுகிறது. உலகத்தை வெப்பமாதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1974-ல் ஸ்டாக்ஹோமில் ஐ.நா சபை மாநாடு நடத்தியது.
மனிதர்கள் செய்கின்ற தவறுகளால் தான் உலகம் வெப்பமயம் ஆகிறது. வெப்பத்தை குறைப்பதற்கான சட்டங்களை அந்தந்த நாடுகள் இயற்ற வேண்டும் இல்லாவிட்டால் 21-ம் நூற்றாண்டின் இறுதியில் காற்று மாசு, உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏற்படும் என்றுஅறிவியலாளர்கள் இந்த மாநாட்டில் எச்சரித்தனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் தொழிற்சாலைகள் உதவினாலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் திரவம், வாயு உள்ளிட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மத்தியபிரதேசம் போபாலில் யுனியன் கார்பைட் நிறுவனத்தில் செரின் என்ற பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
இதிலிருந்து 1984 டிசம்பர் 3-ம் தேதி விஷவாயு வெளியேறியது. அந்த விஷவாயு காற்றில் கலந்ததால் மக்கள், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் இறந்தன.அதற்கு பிறகுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 இந்தியநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பேரிடர்களில் இருந்து மனிதர்கள், உயிரினங்கள், விலங்குகள், செடிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.