மன அழுத்தத்திற்கு அருமருந்தாக யோகா இருக்கிறது என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பயிற்சி செய்து வரும் மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை போன்ற நகர்ப்புறத்தில் மட்டுமல்லாது கிராமங்களில் வசிப்பவர்களிடத்திலும் மன அழுத்தம் இல்லாமல் இல்லை. மன அழுத்தத்தைப் போக்க மக்கள் என்னன்னமோ செய்கின்றனர். ஆனால், அருமருந்து கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பயிற்சி செய்யும் மூத்த குடிமக்கள்.
சென்னையில் அண்ணாநகர் டவர் பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, பெரியமேடு மை லேடீஸ் பூங்கா போன்ற பெரிய பூங்காக்களில் யோகா இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. இதில், மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். அண்ணாநகர் டவர் பூங்காவில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த குடிமக்கள் தங்களது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
ரமணி கங்காதரன் (73), பார்வதி தேவராஜன் (63), ஜீவகுமாரி பிரபாகரன் (63), அருள்மொழி ஜம்புலிங்கம் (62) ஆகியோர் கூறியதாவது:
யோகா எங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. யோகா செய்யாமல் எங்களால் இருக்க முடியாது என்கிற அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யோகா செய்வதற்கு முன்பு வயதான தோற்றம் இருந்தது. இப்போது கொஞ்சம் இளமையாக இருப்பதாக உணர்கிறோம். மன அழுத்தம் இல்லாமல் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடிகிறது.
யோகா கொடுக்கும் உற்சாகத்தில் நிறைய பயணம் செய்கிறோம். முன்பெல்லாம் வாகனங்களில் பயணம் போனால் உடலும் மனமும் களைப்பாகிவிடும். இப்போது அதுபோல இல்லை. கனமழை இல்லாமல் இருந்தால் வாரம் 7 நாட்களும் அண்ணா டவர் பூங்கா வந்து யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். காலையில் யோகா செய்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மாதவிடாய் நிற்கும் போது ஏற்படும் எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு வரவில்லை என்பது வரப்பிரசாதம். நாங்கள் அனைவரும் இல்லத்தரசிகள்தான். அனைவரும் யோகா மூலம் மிகுந்த மன உறுதிமிக்கவர்களாக மாறியிருக்கிறோம். முன்பெல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் மனச்சோர்வு ஏற்படும். இப்போதெல்லாம் எதற்காகவும் கவலைப்படுவதில்லை. அப்படியொரு மன உறுதியை யோகா அளித்துள்ளது.
இங்கு யோகா செய்யும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பரஸ்பரம் நலம் விசாரிப்பது, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து சொல்வது என ஒவ்வொரு நிகழ்விலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
யோகா மாஸ்டர்கள் சிவராமகிருஷ்ணன் (76), எம்.வி.பாலசுப்பிரமணி (70), செல்வராஜ் (73) ஆகியோர்கூறியதாவது:
இங்கு யோகா சொல்லித் தருவதற்கோ, கற்றுக் கொள்வதற்கோ, தொடர்ந்து பயிற்சி செய்வதற்கோ எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை அவரவருக்கு பொறுப்பு இருக்கிறது. நம் உடல், மன ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்தாக வேண்டும். இதை மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும்கூடாது. யோகா, உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுவதுடன் மனக் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கவும் செய்கிறது. கரோனா காலத்தில் பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன. பூங்காக்கள் திறந்தபிறகும் யோகா செய்ய வருவோர் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை.
உடனடி குணமாகிறது என்பதற்காக ஆங்கில மருத்துவத்தை பலரும் நாடுகின்றனர். சித்த மருத்துவத்தில் நோய் குணமாக தாமதம் ஏற்படு்ம். சித்த மருந்து சாப்பிடும்போது பத்தியம் இருப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. யோகாவை Sincere, Regular, Perfect ஆக செய்தால் நம் உடலில் நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் அவை முற்றிவிடாமல், அதே நிலையில் நீடிக்கச் செய்யும். சாப்பிடும் மாத்திரை அளவையும் குறைத்துவிடலாம். உடல் ஆரோக்கியத்தை சீராகப் பராமரிக்க யோகா அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
யோகா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.அன்புமணி(55) கூறுகையில், “சென்னையில் கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவில்லை. கடந்தாண்டு வெள்ளம் காரணமாக நடைபெறவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு தி.நகர் சோமசுந்தரம் மைதானத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவித்தார்.