நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். 2001-ம்ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். கூடலூர்,குன்னூர் தாலுகாக்களில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கிடையே கல்வி பெறுகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டி வாழ்விடங்கள்அமைந்துள்ளதால், வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது. மேலும், போதுமான வாகன வசதி இல்லாததால், பெரும்பாலானோர் நடந்தே பள்ளிக்கு சென்றுவரும் நிலை உள்ளது. கூடலூர்வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தேவர்சோலை அருகில் அமைந்துள்ளது செம்பக்கொல்லி பழங்குடியின கிராமம்.இது வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், இந்த கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மாலைநேரங்களில் கூட மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில், குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு வனத்துறை உதவிக்கரம் நீட்டியுள்ளது. மாணவர்களை வீடுகளில் இருந்து பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்ப வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, கோடை விடுமுறை நிறைவடைந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், செம்பக்கொல்லி கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகளை வனத்துறை வாகனங்கள் அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் கிராமத்தில் விட்டு வருகின்றன. பள்ளி நாட்களில் இவர்களுக்கான இலவச வாகன சேவை தொடரும் எனவனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடன் காத்திருப்போம். பல நேரங்களில் தேர்வெழுதக் கூட போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் நிறைந்த போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும், இதுபோன்று வசதி வேண்டும்" என்றனர்.