வெற்றிக் கொடி

நாம் நட்சத்திரங்களின் பிள்ளைகளா? | அணு முதல் அண்டவெளி வரை 24

என்.சுஜாதா

தொல்காப்பியத்தில், “கொடிநிலை கந்தழி வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” எனும் பாடலில் சூரியன், ‘கொடி நிலை’ என அழைக்கப்பட்டுள்ளது. தமிழர் மரபு உள்பட பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் கதிரவன் வழிபாட்டுமுறை உள்ளது.

எகிப்தியர்கள் ‘ரா’ என்றும் கிரேக்கர்கள் ‘ஹீலியோஸ்’ என்றும் சூரியனை வணங்கினர். தென் அமெரிக்காவின் மாயன், இன்கா இன மக்கள் வழிபட்ட சூரியக்கோயில்களை இன்றைக்கும் காணலாம்.

“சிந்துவெளி நாகரிகத்தில், நகரங்கள் சூரியனின் திசையியலை (Solar Orientation) கொண்டு மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன” என ‘சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பூமியில் உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கும் சூரியன் என்பது என்ன?

விண்மீன் பிறப்பும் இறப்பும்

பிரபஞ்சத்தில் தோன்றிய, எண்ணிலடங்கா நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. மிகப்பெரிய வாயுக்கோளங் களே நட்சத்திரங்கள். ‘நெபுலா' எனப்படும் வாயு, தூசு மேகங்களுக்குள் நட்சத்திரங்கள் பிறக்கின்றன. நிறை அதிகரிக்கும்போது நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வாயுக் கள், தூசிகள் அனைத்தும் அதன் மையப்பகுதியை நோக்கி இழுக்கப்படுகின்றன.

இதனால் நட்சத்திரத்தின் மையத்தில் அழுத்தமும் வெப்ப நிலையும் உயர்கின்றன. அதீத வெப்பத்திலும், அழுத்தத் திலும், அணுக்கரு இணைவு (Nuclear Fusion) நடக்கிறது. நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாக உருவாகிறது.

ஆனால், ஹீலியத்தின் நிறை, இணைந்த நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்களின் மொத்த நிறையைவிடக் குறைந்து வரும். இந்த விடுபட்ட சிறிய நிறைதான், ‘E = mc2' என்கிற ஐன்ஸ்டைனின் விதியின்படி, பிரம்மாண்ட மான ஒளியாகவும் வெப்பமாகவும் வெளியாகிறது.

நட்சத்திரங்களில் இரண்டு எதிரெதிர் விசைகள் செயல் படுகின்றன. ஈர்ப்புவிசை, நட்சத்திரத்தின் ஒட்டுமொத்த நிறையையும் மையத்தை நோக்கி இழுக்கிறது. அதே நேரம், அதன் மையத்தில் அணுக்கரு இணைவில் வெளிப்படும் ஆற்றலோ, நட்சத்திரத்தை வெளிநோக்கித் தள்ளுகிறது.

இந்த விசைகள் சமமாக இருக்கும்வரை நட்சத்திரம் நிலையாக, பிரகாசமாக ஒளிர்கிறது. இதை நீரியல் சமநிலை (Hydrostatic Equilibrium) என்பார்கள். இந்தச் சமநிலை எப்போது தடுமாறுகிறதோ, அன்றைக்கு நட்சத்திரங்கள் அழியத்தொடங்கிவிடும்.

சிவப்பு ராட்சச விண்மீன்

சூரியனைப் போன்ற நடுத்தரமான நட்சத்திரங்களின் மையப்பகுதியில் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்தவுடன், அங்கே நடைபெற்ற அணுக்கரு இணைவு முடிகிறது. இதனால், நட்சத்திரத்தை வெளிநோக்கித் தள்ளும் ஆற்றல் குறைகிறது. ஈர்ப்பு விசையினால் நட்சத்திரத்தின் மையப்பகுதி உள்நோக்கிச் சுருங்கி வெப்பமடைகிறது.

இந்த அதீத வெப்பத்தின் தாக்கத்தால், வெளி ஹைட்ரஜன் அடுக்குகளில் (Shell) மீண்டும் அணுக்கரு இணைவு தொடங்கிவிடும். இதனால் ஏற்படும் அபரிமிதமான ஆற்றலில், நட்சத்திரத்தின் வெளியடுக்குகள், மையத்தில் இருந்து வேகமாக, வெளிப்புறமாகத் தள்ளப்படுகின்றன.

அதன் விளைவால் நட்சத்திரம், நூற்றுக்கணக்கான மடங்கு வீங்கிப் பெரிதாகிறது. இதில் வெளிப்புற அடுக்குகள் மையப் பகுதியை விட்டு வெகு தூரம் சென்றுவிடுவதால், அதன் வெப்பநிலை குறைந்து, ஒளியின் அலைநீளம் அதிகரித்து நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பிரம் மாண்டமாகச் சிவப்பாகக் காணப்படும் இந்நிலையைச் சிவப்பு ராட்சச விண்மீன் (Red Giant) என்பார்கள்.

மங்கும் சூரியன்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனும் சிவப்பு ராட்சச விண்மீனாக மாறக்கூடும். அப்போது அதன் அருகில் இருக்கும் புதன், வெள்ளி ஆகிய கோள்களை முழுமையாக விழுங்கிவிடலாம்! பூமி முற்றிலும் உருகிய பாறையாக மாறிவிடும். உயிரினங்களே இருக்காது.

இறுதி நிலையில், சூரியன் தன்னுடைய வெளிப்புற அடுக்குகளை உதிர்த்துவிட்டு, சிறிய, அடர்த்தியான ‘வெள்ளைக் குள்ளன்’ (White Dwarf) நட்சத்திரமாக மாறலாம். பிறகு சூரியன் மெதுவாகக் குளிர்ந்து மங்கத் தொடங்கும்.

ஆனால், சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள் அழியும்போது, ஈர்ப்புவிசையின் காரணமாக அவற்றின் மையப்பகுதி நொடிப் பொழுதில் உள்நோக்கிச் சரியும். இதன் விளைவாகப் பயங்கரமான வெடிப்புடன் நட்சத் திரம் சிதறும். இதுவே ‘சூப்பர்நோவா' (Supernova). வெடிப்பிற்குப் பிறகு எஞ்சியிருக்கும் நிறையைப் பொறுத்து, அது நியூட்ரான் நட்சத்திரமாக மாறலாம். அல்லது நிறை அதிகமாக இருந்தால், அதன் சொந்த ஈர்ப்புவிசையால் மேலும் சுருங்கிக் கருந்துளையாக மாறலாம்.

ஆனால், நட்சத்திரங்களின் மரணம் இறுதியல்ல. அதுவே புதிய விண்மீன்களுக்கும், கோள்களுக்கும் தேவையான மூலப்பொருள்களை வழங்கிவிடும். இரும்பு, தங்கம், யுரேனியம் போன்ற கனமான தனிமங்கள் நட்சத்திரங்களின் அழிவிலிருந்தே விண்வெளியில் சிதறுகின்றன. அவற்றிலிருந்தே புதிய நட்சத்திரங்களும் கோள்களும் தோன்றுகின்றன. கார்ல் சாகன் சொன்னதைப் போல “நாமும் நட்சத்திரங்களில் இருந்து பிறந்த வர்களே!”

(தொடர்ந்து தேடுவோம்)

- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com

SCROLL FOR NEXT