தினமும் குளிக்க வேண்டியது அவசியமா, டிங்கு?
- க. சர்வேஷ், 10-ம் வகுப்பு, பாரதி வித்யா பவன், ஈரோடு.
சுத்தத்துக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் தினமும் ஒருமுறை, அல்லது இருமுறை குளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எலைன் லார்சன், தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
பாஸ்டனைச் சேர்ந்த தோல் ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான ரானெல்லா ஹிர்ஸ்க், தினமும் குளித்தால் தோலுக்குப் பாதிப்பு என்றும் நம் உடலில் சுரக்கும் எண்ணெயே தோலைப் பாதுகாக் கும் என்கிறார். ஆனால், நம் நாட்டுவெயிலுக்குக் குளிக்காமல் இருந்தால்வியர்வை நாற்றம் தாங்க முடியுமா, சர்வேஷ்? குளித்தால்தான் உடலும்மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. அதனால் இருவேளை குளிக்காவிட்டா லும் ஒருவேளை குளிப்பதுதான் நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது!
மாடு கன்று போட்டவுடன் சுரக்கும் பால் ஏன் மஞ்சள் நிறமாக இருக்கிறது, டிங்கு?
- ஆர். ரஞ்சிதா, 8-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
மாடு கன்று போடுவதற்குச் சற்று முன்பாகவோ கன்று போட்ட பிறகோ சுரக்கும் பாலை, சீம்பால் என்று அழைக்கிறார்கள். இது வழக்கமான பாலின் நிறம்போல் இல்லாமல், சற்று மஞ்சளாக இருக்கும்.
இதில் மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு ஆற்றல் எல்லாம் அதிகமாக இருக்கின்றன. அதனால் பாலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது, ரஞ்சிதா. பிறந்த குட்டிக்குச் செரிமானம் ஆக வேண்டும் என்பதால், இந்தப் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும்.