எந்த க்ரீமைப் பயன்படுத்தினாலும் ஏன் என் தோல் வெள்ளையாக மாறவில்லை, டிங்கு?
- வி. அஸ்வதி, 11-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.
எந்த க்ரீமைப் பயன்படுத்தினாலும் தோலின் நிறம் மாறாது. இதை நீங்கள் அனுபவப்பூர்வமாகவே அறிந்து கொண்டீர்கள். வெள்ளை உயர்வானது, கறுப்பு தாழ்வானது என்ற எண்ணத்தைத்தான் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் சூரிய ஒளி அதிகமாகவும், மற்ற பகுதிகளில் குறைவாகவும் விழுகிறது. சூரிய ஒளியில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் இருக்கின்றன. இவை ஓசோன் மண்டலத்தால் வடிகட்டப்படுகின்றன.
அப்படியும் மீறி வரும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் சக்தி நம் தோலிலுள்ள நிறமிகளுக்கு உண்டு. மெலனின் நிறமி அதிகம் சுரந்தால் கறுப்பாகவும் குறைவாகச் சுரந்தால் வெள்ளையாகவும் தோல் மாறுகிறது. இப்போது சொல்லுங்கள், ஆபத்து உண்டாக்கும் கதிர்களைத் தடுத்து, உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கும் கறுப்புத் தோல் தாழ்வானதா? உங்களுக்கு ஒன்று தெரியுமா, இந்தியர்கள் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நாம் ‘கறுப்பர்கள்’தாம். அவர்களைப் பொறுத்தவரை, அவர்களைத் தவிர மற்றவர்கள் கறுப்பர்களே.
அதாவது உங்களையும் உங்கள் தங்கையையும் அவர்கள் ஒரே நிறமாகத்தான் பார்ப்பார்கள். நாம் என்பது நம் நிறமல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இயற்கையாக அமைந்த உருவத்தையும் நிறத்தையும் குறித்துப் பெருமைப்படுவதற்கோ வருத்தப்படுவதற்கோ எதுவுமே இல்லை, அஸ்வதி.