மண்ணைத் தோண்டும்போது ஒரு தவளை வெளியே ஓடிவந்தது. அது எப்படி மண்ணுக்குள் உயிரோடு இருக்கிறது, டிங்கு?
- எஸ். ஜீவானந்தன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.
அதிக வெப்பம், அதிகக் குளிர் போன்ற தட்பவெப்பங்களில் இருந்துதப்புவதற்கும் இரை கிடைக்காத காலங்களிலும் உயிரோடு இருப்பதற்கும் நிலத்துக்கு அடியில் சென்று நீண்ட உறக்கம் கொள்கின்றன பல்வேறு உயிரினங்கள். மண்ணைத் தோண்டி நிலத்துக்குள் வலையை உருவாக்கிக் கொள்ளும் தவளை. மண்ணுக்குள் காற்று எளிதாகச் செல்லும் என்பதால் சுவாசிப்பதில் பிரச்சினை இருக்காது. தவளையின் உடலில் நீரைச்சேமித்து வைத்திருப்பதால் உடல்நீர்ச்சத்தையும் இழக்காது. தட்பவெப்பநிலை சாதகமாக மாறும்போது தவளை நிலத்துக்குள்ளிருந்து வெளியே வந்துவிடும், ஜீவானந்தன்.
சூரியன் ஏன் கிழக்கில் உதிக்கிறது, டிங்கு?
- ஆர். நர்மதா குமாரி, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சூரியன் உதிப்பதும் இல்லை,மறைவதும் இல்லை. அது எப்போதும் ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சூரியனை மையமாக வைத்து பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் சுற்றி வருகின்றன.
பூமி தானும் சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும்போது இரவு, பகல் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பூமி கிழக்கு திசை நோக்கிச் சுற்றுவதால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. தெற்கு திசை நோக்கியோ வடக்கு திசை நோக்கியோ சுற்றினால் சூரியன் அந்தத் திசையில் உதிப்பதாகத் தோன்றும், நர்மதா குமாரி.