இரா.முரளி
அவளுக்கு அப்போது 10 வயது. அவள் வயதுக் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு, வெளியே நண்பர்களுடன் விளையாட ஓடிச் செல்லும் வேளையில் அவள் மட்டும் தன்னுடைய வீடியோ கேமரா, மைக் ஆகியவற்றுடன் வெளிநாட்டுப் பிரதமர்களையும், தலைவர்களையும் சந்திக்கக் புறப்பட்டாள். அவள் பெயர் ஜூயுரில் ஒடுவோல். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய தந்தை நைஜீரியா நாட்டுக்காரர். அம்மா மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
பள்ளியில் நடைபெற்ற ஆவணப்படத் தயாரிப்புப் போட்டியில் கலந்து கொண்டதில் இருந்து ஆவணப்படங்களை உருவாகும் பேரார்வம் ஜூயுரிலுக்கு உண்டானது. ஜூயுரில் எடுத்த முதல் ஆவணப்படம், ‘கானா புரட்சி’. ஆப்பிரிக்க நாடான கானாவில் வாழும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது பற்றிய படம் அது. அப்படம் பரிசு மட்டுமின்றி, உலகின் கவனத்தையும் ஈர்த்தது.
கானா நாட்டுப் பெண்களின் கல்வி தரம் மிகவும் மோசமாக இருந்தது என்பதை ஆவணப் படமாக்கியபோது, கருப்பு இன மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி ஜூயுரில் தேடித்தேடி ஆராய்ந்தார். அதன் விளைவாக, ஆப்பிரிக்காவை வறுமையில் இருந்து விடுதலை செய்யும் கல்வி என்பதை மையமாக வைத்து அவருடைய இரண்டாவது ஆவணப்படம் உருவானது. 2014-ல் ஆப்பிரிக்காவில் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய ஆவணப்படத்தை எடுத்தார்.
‘வளரும் ஆப்பிரிக்கா’ என்ற ஆவணப்படம், ஜூயுரிலுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. படம் எடுப்பது என்பது வெறும் கேமராவை கொண்டு காண்பதை எல்லாம் எடுப்பது என்றில்லாமல், அந்தந்த நாட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் நாட்டுப் பெண்களின் பிரச்சினைகள், கல்வி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி எல்லாம் கேள்விகள் எழுப்பி பதில்களை ஜூயுரில் பதிவு செய்தார். இதன் வழியாக அந்நாடுகளில் பெண் கல்வியின் நிலை உயரத் தொடங்கியது.
உலகத் தலைவர்களுடன் உரையாடல்
தான்சானியா, கென்யா, நைஜீரியா, சூடான், லிபிரியா போன்ற 27க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஜூயுரில் நேர்காணல் செய்து ஆவணப்படங்களை உருவாக்கினாள். இம்மாதிரி நாடுகளின் தலைவர்களுடன் உரையாட வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசியல் மற்றும் மக்கள் பற்றிய புரிதல் வேண்டும்.
அதற்குத் தேர்வுக்குத் தயாராவது போல் படித்து பலன் இல்லை. கிரிக்கெட், சினிமா தகவல்களை எப்படி ரசித்து ஆர்வத்துடன் சேகரிக்கின்றோமோ அதுமாதிரி ஒரு சுய ஆர்வமும், தேடலும் தேவை. இத்தனை பேரார்வத்துடன் ஜூயுரில் எடுத்த ‘வளரும் ஆப்பிரிக்கா’ படம் நைஜீரியா, கானா, தெற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் பெரிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜூயூரில் எந்தப் பள்ளியிலும் படிக்கவில்லை. கலிபோர்னியா கல்வித்துறை ஆன்லைன் மூலமாக கல்வியை அவர் மேற்கொள்ளுகிறார். தற்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி பரப்புரை செய்யும் பெண்ணாகாவும் ஆகிவிட்டார். அடிக்கடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று, அங்குள்ள கிராமப்புற சிறுவர்களிடம் கல்வி கற்க வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றி வருகிறார்.
கனவு காணுங்கள்! பேசுங்கள்!
‘கனவு காணுங்கள்! பேசுங்கள்! எழுந்திருங்கள்!’ என்ற முழக்கத்துடன் ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் இதுவரை 9 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் சிறுவர்களை ஜூயூரில் சந்தித்து உரையாடியுள்ளார். உலகிலுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு பெற வைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்கவின் புகழ் வாய்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை, உலகினை ஈர்த்தவர்கள் பட்டியலில் ஜூயூரிலின் பெயரையும் சேர்த்துள்ளது. பிபிசி, சிஎன்பிசி போன்ற உலகத் தொலைக் காட்சிகளில் அவருடைய நேர்காணல் ஒளிபரப்பானது.
‘உலகை மாற்றும் பெண்கள்’ என்னும் வரிசையில் ஜூயுரிலை, எல்லி நிறுவனம் சேர்த்துள்ளது. அவருடைய சேவைக்காக கலிபோர்னியாவில் கவர்னர் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. யுனொஸ்கொ அமைப்பினால் அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் ஊடகங்கள் பற்றி பேச வைக்கப்பட்டார்.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக் கழகம் அவரைப் பேச அழைத்தன. குழந்தைகளுக்கான கல்வி, குறிப்பாக பெண் கல்வி பற்றி இந்த சிறுமி கவலையோடு பேசி வருவது உலகில் பலராலும் கவனிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிக்கையில் 2016 முதல் அவர் கட்டுரை எழுத தொடங்கினார். ‘புவிமாற்றம் குழந்தைகளின் கல்வியை எவ்வாறு பாதிக்கும்’ என்று பேச ஐநா சபையால் 2016-ல் அழைக்கப்பட்டார்.
தன்னுடைய நிறுவனத்தின் மூலம் சிறப்பாக பாலின சமத்துவம், சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்வதைத் தடுப்பது போன்றவை பற்றியும் இப்பொழுது பரப்புரை செய்து வருகிறார். நாமும் செல்போன் கேமராவில் பல்வேறு புகைப்படங்கள் எடுத்து வருகிறோம். ஆனால் இம்மாதிரி உயர்ந்த நோக்கத்துடன் செல்போன் கேமராவை இனி பயன்படுத்தத் தொடங்கலாமா?
கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.