தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தொடக்கக் கல்வி இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை தற்காலிகஅடிப்படையில் பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த தகுதியுடைய நபர்களை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நிரப்பிக் கொள்ளலாம். தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆசிரியர் கல்வித்தகுதி கொண்டவர்களை மட்டும் இப்பணியிடங்களுக்கு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
3 மாதங்களுக்குள் மாணவர்களின் பாடப்பகுதிகளை தற்காலிக ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இதை உறுதி செய்ய வேண்டும்.
தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பு ஊதியம் தொடக்க கல்வித்துறை மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் அந்த தொகையை தாமதமின்றி பெற்றோர் ஆசிரியர் கழகம் அல்லது பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்க வேண்டும்.
இந்த தற்காலிக ஆசிரியர்களை 2019-2020-ம் கல்வியாண்டின் கடைசி நாளில் பணியில் இருந்து விடுவித்துவிட வேண்டும். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கக்கூடாது. ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் இவர்களின் பெயர்களை பதிவு செய்யக்கூடாது. பணிக்காலம் முடிந்ததும் பணிச்சான்றும் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 3,624 இடைநிலை ஆசிரியர்களை மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நியமித்துக் கொள்ள ரூ.8 கோடியே 15 லட்சத்து 40, ஆயிரத்துக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.