தொடர்கள்

உயர்கல்விக்கு திறவுகோல்-14: கலை படிப்பின் தலைநகரம்

செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

உயர்கல்வியில் என்ன படிக்கிறோம் என்பதற்கு இணையாக, அதனை எங்கே படிக்கப் போகிறோம் என்பதும் முக்கியம். கலை, அறிவியல் படிப்பானாலும் அவற்றை நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வது ஒளிமயமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும்.

அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் பிரிவுகளுக்கு உட்பட்ட பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கான பிரத்யேக நுழைவுத் தேர்வாக JNUEE (Jawaharlal Nehru University Entrance Examination) விளங்குகிறது. பொதுவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களில் சேர்ந்து பயிலவே, சர்வதேச அளவில் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அதே பல்கலைக்கழகத்தின் பி.ஏ. (ஹான்ஸ்)., மூலம் பல்வேறு கலை அறிவியல் மற்றும் சமூகவியல் படிப்புகளை இளநிலை அளவிலும் தொடங்கி பயில்வதற்கு பல்கலைக்கழக அளவிலான நுழைவுத் தேர்வு வழிசெய்கிறது.

விண்ணப்பிக்க தகுதி

இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயதுத் தகுதி 17 ஆகும். பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். தேர்வின் முடிவில் தேர்ச்சியுடன் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது 45% மதிப்பெண்களை பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பித்தல், தேர்வு கட்டணம் செலுத்துதல், ஹால் டிக்கெட் பெறுதல்,தேர்வு எழுதுதல், தேர்வு முடிவுகளை அறிதல் என அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு மற்றும் நேர்காணல் நடைமுறைகள் நேரடியாக நடைபெறும்.

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான வலைப்பக்கத்தினை அணுகி, முதலில் முறையாகப் பதிவு செய்துகொண்ட பின்னர், விண்ணப்ப படிவத்தினைபூர்த்தி செய்யலாம். முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி ஆகியவற்றை பூர்த்தி செய்ததும், அதற்கான சான்றுகளின் நகல்கள், புகைப்படம், மாதிரி கையெழுத்து ஆகியவற்றையும் பதிவேற்ற வேண்டும். தொடர்ந்து அங்கு தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முக்கிய தினங்கள்

ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 2-31 இடையே தொடங்கி நிறைபெறும். JNUEE நுழைவுத் தேர்வு மே 11-14 இடையே நடைபெறும். தேர்வு முடிவுகள் மே இறுதியில் வெளியாகும். கலந்தாய்வின் முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகி, ஜூலையில் வகுப்புகள் தொடங்கும்.

தேர்வு நடைமுறைகள்

தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நுழைவுத் தேர்வு மையங்கள் செயல்படும். இளநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு உள்ளிட்டவை சார்ந்த வினாக்களுடன், விண்ணப்பிக்கும் துறை சார்ந்த அடிப்படை வினாக்களும் அமைந்திருக்கும். ஆங்கிலத்திலான 3 மணி நேர தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு அமைந்திருக்கும். நுழைவுத் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஜே.என்.யூ.வில் சேர்ந்து கல்வி பயில்வதற்கான கல்வி கட்டணம் சொற்பம் என்றபோதும், தங்கிப் படிப்பது, உணவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு பல்வேறு உதவைதொகை திட்டங்கள் உள்ளன. மேலும் ஜே.என்.யூ. மாணவர்களின் கல்விக்கடனுக்கும் வங்கிகள் முன்வந்து கல்விக்கடன் அளிக்கின்றன. மேற்கொண்டு விருப்பமான முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம்ஆகியவற்றை, கலை, அறிவியல், சமூகவியல் மட்டுமன்றி பொறியியல், வணிக மேலாண்மை உள்ளிட்ட உயர்கல்வித் துறைகளிலும் விரும்பிய வகையில் அதே வளாகத்தில் நிறைவு செய்யலாம்.

எத்தனை பாடங்களுக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் மாறுபடுகிறது.

SCROLL FOR NEXT