ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
நாய்கள் என்றால் கொள்ளை பிரியமா? தெருவில் நடக்கும் போது நாய்களை பரிவுடன் பார்ப்பவரா நீங்கள்? நாய்கள் மீதான உங்கள் அன்பு உங்களுக்கு மாத வருமானம் தரும்! எப்படி?
நாய்கள் நன்றியுள்ளவை என்பதைத் தாண்டி அவற்றின் சமுதாயப் பங்களிப்பு விரிந்துபட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சமீபக் காலங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, தீவிரவாத செயல் தடுப்பு ஆகிய வேலைகளில் நாய்களை மிஞ்ச ஆளில்லை. அவற்றால் காப்பாற்றப்படும் மனித உயிர்கள் மிக அதிகம்.
நாய்களின் பங்களிப்பு: போதைப்பொருள் தடுப்பு, ரோந்துப் பணி என காவல்துறை/பாதுகாப்புத் துறை சார்ந்த பணிகளிலும் நாய்களின் பங்களிப்பு மிகுதியானது. பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளின் பாதிப்புகளில் உயிருடன் சிக்குண்ட மனிதர்களை மீட்பதிலும் நாய்களின் சேவை மெச்சத்தக்கது. நிலத்தில் மட்டுமன்றி நீர்நிலைகளிலும் சிக்குண்ட மனிதர்களைக் கண்டறியும் திறன் நாய்களுக்கு உண்டு.
மனிதர்களுக்கு உதவி: வீட்டில் செல்ல பிராணியாக மனிதர்களோடு அன்போடு பழகி வீட்டுக்காவல் பணி செய்பவை நாய்கள். அதையும் தாண்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், தனியாக வாழும் வயதானவர்களுக்கு நாய்களின் துணை ஒரு சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது. மனித உடலியல் மாற்றங்களை வைத்து மாரடைப்பு உள்ளிட்டவற்றை முன்னறியும் திறன் நாய்களிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.
நாய்களை சார்ந்த வணிகச்சந்தை: ஏறக்குறைய 2 கோடி வளர்ப்பு நாய்கள் இந்தியாவிலுள்ளன. இந்தியாவில் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுச் சந்தையின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 2,385 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு நாய்களின் உணவு சார்ந்தது. காவல்துறை, பேரிடர் மீட்புப்படை, எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம் என பல அமைப்புகளிலும் நாய்கள் அங்கம் வகிக்கின்றன.
வேலைவாய்ப்பு: மேலே குறிப்பிட்ட எல்லா பணிகளையும் நாய்கள் செய்ய பயிற்சி தேவை. வீட்டு நாய்களில் இருந்து ராணுவ நாய்கள் வரை பயிற்சியாளர்களுக்கான பெரிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாதச்சம்பளம் பெறும் நாய் பயிற்சியாளர்கள் (Dog Trainers) உண்டு. மென்பொருள் நிறுவனங்களில் பொறியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சியளிக்கப்பட்ட நாய்களோடு அவர்கள் நேரத்தைச் செலவிடும் சிகிச்சை முறை இந்தியாவில் பெருக ஆரம்பித்திருக்கிறது. நகரத்து வீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், பாதுகாப்பு படை என நாய் பயிற்சியாளர்களுக்கான தேவை பெருகி உள்ளது.
கல்வித் தகுதி: நாய் பயிற்சியாளர் அல்லது நாய் பழக்குனர் (Dog Behaviourist) ஆக என்ன செய்ய வேண்டும்? இதற்கு எந்த குறிப்பிட்ட கல்வித் தகுதியும் தேவையில்லை. வாடிக்கையாளர்களோடு உரையாடுவதற்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்திருப்பது நல்லது. நாய் பயிற்சியாளராக சிறப்புப் பயிற்சிகள் உண்டு. இந்த சான்றிதழ் பயிற்சிகளில் வகுப்பறை போதனையும் களப்பயிற்சிகளும் உண்டு. பயிற்சிகளில் பல படிநிலைகள் உண்டு.
பயிற்சிப் பள்ளிகள்: சென்னையில் உள்ள வுட்ஸ்டாக் நாய் பயிற்சிப் பள்ளியும் (Woodstock Dog Training School), கொச்சியில் உள்ள நாய் பயிற்சிப் பள்ளியும் (Cochin Dog Training Academy) முக்கிய தென்னிந்திய தனியார் பயிற்சிப் பள்ளிகளாகும். காவல்துறையிலும், பாதுகாப்புத் துறையிலும் பயிற்சிப் பள்ளிகள் உண்டு. நாய்களை நேசிப்பவர்கள் நாய் பயிற்சியாளர் பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். புதியன விரும்பு!
(தொடரும்)
கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.