தொடர்கள்

ஐம்பொறி ஆட்சி கொள்-12: கொடி தந்த குமரி

செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காக காந்தி களம் இறங்கிய தருணம். ஒரு குறிப்பிட்ட போராட்டத்தில் ஒரு உறுதிமொழித்தாளை எடுத்து வாசிக்க வேண்டும். யார் இந்த தாளில் உள்ளதை வாசிக்கிறீர்கள் என்று கேட்கிறார். அக்கூட்டத்தில் ஒரு சிறுமி முன்வருகிறார். தனது வெண்கலக்குரலில் அதனை வாசிக்கிறார். அப்போது அவருக்கு வயது 15.

ஒருவழியாக அடக்குமுறைகளை மீறிஊர்வலம் தொடங்குகிறது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது நாடு எது என்பது குறித்து சர்ச்சை எழுகிறது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது.

உங்களுக்கென்று சொந்தமாக ஒரு கொடிகூட கிடையாதே என எள்ளி நகையாடுகிறார். கொதித்துப்போகும் அந்த பெண் தனது துணியின் ஒரு பகுதியைக் கிழித்து ஒரு குச்சியில் இணைத்து இதுதான் இந்தியாவின் கொடி என்று உணர்ச்சி பொங்கப் பகிர்கிறார். காந்தி அதிர்கிறார். யார் இந்த சிறுமி? தில்லையாடி வள்ளியம்மை (1898-1924).

உரிமை மறுக்கப்பட்ட இந்தியர்கள்

செல்வம் கொழிக்கும் நாடுகளின் வானுயர்ந்த கட்டுமானங்களுக்கு பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் கடினஉழைப்பே. இந்த வரிசையில் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவில் இருந்து பலர் உழைப்பாளிகளாகச் சென்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் மற்றும் குஜராத் மாநில மக்களே. அக்காலகட்டத்தில் இந்தியர்கள் சொத்து வாங்க உரிமை கிடையாது. அவர்களது திருமணத்தை கிறிஸ்தவமுறையில் பதிவு செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி பல நெருக்கடிகளுக்கு இந்தியர்கள் ஆளாக்கப்பட்டனர். ஆனால், இந்த நிபந்தனைகளை எல்லாம்சொல்லி இந்தியர்கள் அழைத்துவரப்படவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில்தான் காந்தி வழக்கறிஞராக அங்கே செல்கின்றார். அவரது மனம் பதைபதைக்கிறது. வந்த வேலையைவிட்டுவிட்டு தென்னாப்பிரிக்க மக்களுக்கான உரிமை மீட்பில் இறங்குகிறார்.

நாட்டுக்காக உயிர் நீத்தவள்!

அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்றுதான் தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற போராட்டம். இந்த போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகும் பதினைந்தே வயதான சிறுமிதான் தில்லையாடி வள்ளியம்மை. சிறையில் அவரது உடல்நலம் குன்றுகிறது. இதனை காரணம் காட்டிஅவரை அரசு விடுவிக்க முன்வருகிறது. ஆனாலும் வள்ளியம்மை முற்றிலும் மறுத்துவிடுகிறார். குறிப்பிட்ட கோரிக்கை நிறைவேறி அனைவரும் விடுதலையாகும்போதுதான் விடுதலை ஆகிறார்.

சிறைமீண்ட பின்னரும் அவரது உடல்நிலை சீராகவில்லை. சில மாதங்களில் அவர் மரணிக்கிறார். ஒருமுறை காந்தி இவரிடம் சிறைதானே உனது உடல்நலனை இவ்வளவு சீரழித்துவிட்டது. நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா என்று கேட்கிறார். “இல்லை பாபு இன்னொரு முறை தேவைப்பட்டால் கூட நான் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்” என்றார். “ஒருவேளை நீ சிறையிலேயே உயிரைவிட நேர்ந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்கும்போது “தாய்நாட்டுக்காக உயிரைக்கொடுக்க விரும்பாதவர்கள் யார்தான் இருப்பார்கள்” என்றார்.

தில்லையாடி என்னும் சிறு கிராமத்தில் பிறந்து ஜோகனஸ்பர்க் வரை சென்று மனித உரிமைகளுக்காகவும், நியாயத்துக்காகவும் பாடுபட்டு 16 வயதிலேயே மரணித்த வள்ளியம்மையின் நாட்டுப்பற்றை நினைவிலேற்றுவோம். அவர் வாழ்ந்தது குறைவான காலமாயிருக்கலாம். சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை போராட்டத்தை காந்தி முன்னெடுப்பதற்கு உத்வேகம் ஊட்டியவர் என்பது மட்டும் நாம் மறக்கக்கூடாது. சுயமரியாதையும், கொண்ட லட்சியத்தில் உறுதியும் கொண்டோராக நாம் விளங்கவேண்டுமென்பதற்கான சாட்சி இவர். நாமும் இவரிடம் கற்போமா?

(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். முனைவர் என்.மாதவன்

SCROLL FOR NEXT