தொடர்கள்

உடலினை உறுதி செய்-12: முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் சலபாசனம்

செய்திப்பிரிவு

ஆர்.ரம்யா முரளி

சலபம் என்றால் வெட்டுக்கிளி. இந்த ஆசனத்தின் இறுதி நிலை வெட்டுக்கிளி போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.

விரிப்பின் மேல், வயிற்றுப் பகுதி தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஆரம்ப நிலை. உடலை ஒட்டியவாறு கைகளை வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். நெற்றி தரையில் படுமாறு இருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்றாக இழுத்தபடியே கழுத்து, மார்புப் பகுதி மற்றும் கால்களை தூக்க வேண்டும். இது ஒரு விதமான செயல்முறை. இந்த ஆசனத்தை இரண்டு மூன்று விதத்திலும் செய்யலாம்.

கழுத்து, மார்புப் பகுதியை உயர்த்தும் போதே, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் இருந்து முன்னே கொண்டு வந்து தலைக்கு மேலே நமஸ்காரம் செய்வது போல வைத்து, கால்கள் இரண்டையும் தூக்கலாம். இது ஒரு முறை. இதுதான் பாரம்பரிய முறையில் சொல்லப்பட்டுள்ளது.

சிலர் கைகளை இயக்காமல், இடுப்பில் இருந்து கால்களை மட்டும் தரையில் இருந்து தூக்கியும் செய்வதுண்டு. இதுவும் சலபாசனத்தின் ஒரு வகையே. ஆனால், இது சற்று கடினமான ஆசன வகை என்பதால், இதை செய்வதற்கு முன், அர்த்த சலபாசனம் செய்வதன் மூலம், நம் உடலை இந்த கடின யோகப் பயிற்சிக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.

அர்த்த சலபாசனம் செய்யும் முறை

விரிப்பின் மேல், வயிற்றுப் பகுதி தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் தரையில் பக்கவாட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். நெற்றி தரையில் படுமாறு இருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்றாக இழுத்தபடியே கழுத்து, மார்பு பகுதி மற்றும் வலது காலை தூக்க வேண்டும். இதேபோல் இடது காலை தூக்கி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிக்கு உடலை தயார் செய்த பின் இரண்டு கால்களை தூக்கி செய்யும் பூர்ண சலபாசனத்தை செய்யலாம்.

பலன்கள்

முதுகு நன்றாக வளைவதால், முதுகின் அடிப்பகுதி நன்றாக பலம் பெறும். கைகளை இயக்கி பயிற்சி செய்யும்போது, முதுகின் மேல் பகுதி, தோள்பட்டை தசைகளும் நன்றாக வேலை செய்யும். வயிற்றுப் பகுதி நன்றாக தரையில் அழுத்தப்படுவதால், வயிற்றில் உள்ள உறுப்புகள் தூண்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. வயிற்று தசைகளுக்கு பயிற்சியளிக்கக் கூடிய நல்ல ஆசனம் இது. மார்பு தசைகளும் விரிவடைவதால் சுவாசத் திறன் அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

முதுகுவலி உள்ளவர்கள், அந்த வலியை சரி செய்த பின்தான் இந்த ஆசனத்தை முயற்சி செய்ய வேண்டும். முதுகு தசைகள் பலம் பெறும் என்று, இந்த ஆசனத்தை அவர்கள் செய்தால், வலி அதிகமாகும். இந்த பயிற்சி பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், முறைப்படி ஒரு குருவின் மூலமாக கற்றுக் கொள்வது நல்லது. ஆயத்த பயிற்சிகளை குருவின் வழிகாட்டுதலின்படி செய்வதன் மூலம் இதுபோன்ற கடினமான ஆசனங்களை எளிதாக செய்யலாம்.

(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்

SCROLL FOR NEXT