எஸ்.எஸ்.லெனின்
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டம் பயில்வதற்கான நுழைவுத்தேர்வு நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன. 5 ஆண்டுகளுக்கான பி.ஏ., எல்.எல்.பி., படிப்பதற்கான அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வுக்கு (AILET 2020), ஜனவரி 15 முதல் விண்ணப்பிக்கலாம்.
50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2-வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நடைமுறைகள்
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கான இணையதளப் பக்கத்தில், விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல், அலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து தமக்கான தனி கணக்கினை தொடங்க வேண்டும். பிறகு கடவுச்சொல் மூலம் தமதுகணக்கினுள் நுழைந்து விண்ணப்ப நடைமுறைகளை தொடங்கலாம். கல்வித் தகுதி, முகவரிமற்றும் தனிப்பட்ட விவரங்களை முறையாக பூர்த்தி செய்வதுடன், கையெழுத்து, புகைப்படம்,ஆவண நகல்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்ற வேண்டும். தேர்வுக்கட்டணத்தை செலுத்தி முடித்ததும் விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது மற்றும் தரவேற்ற நகல்கள் ஆகியவற்றை முறையாகச் சரிபார்த்திருப்பது அவசியம். குறைபாடுள்ள விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
நுழைவுத் தேர்வு நடைமுறைகள்
விண்ணப்பம் பரிசீலனையாகி ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அதே இணையதள கணக்கை திறந்து நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையை (அட்மிட் கார்ட்) தரவிறக்கி, கூடுதல் பிரதிகளில் அச்செடுத்து வைத்துக்கொள்ளலாம். இதே இணையதளத்தில் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் மாதிரிகள் வழங்கப்பட்டிருக்கும். அவற்றில் பயிற்சி பெறுவதும்நல்லது. பாடத்திட்டத்தில் General knowledge, Reasoning, legal aptitude, Mathematics, English ஆகியவை அடங்கி இருக்கும். தொடர்ந்து மே 3 அன்று நடைபெறும் ஆங்கில வழி நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வில் 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் பதிலளித்தாக வேண்டும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் கிடைப்பதுடன், தவறான விடைக்கு கால் (0.25) மதிப்பெண் கழிக்கப்படும். சென்னை உட்பட நாட்டின் 20 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும்.
தேர்வுக்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் தேர்வு முடிவுகள் வெளியாகும். தொடர்ந்து கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கான நடைமுறைகள் தொடங்கும். மிகக்குறைவான இருக்கைகளுக்கானது என்பதால், நுழைவுத்தேர்வு சற்று கடினமாக இருக்கும். நீண்ட காலத் தயாரிப்பு மற்றும் மாதிரித் தேர்வுகளை முறையாக பயன்படுத்திக் கொள்வது தேர்வின் கடினத்தைப் போக்கும்.