தொடர்கள்

ஐம்பொறி ஆட்சி கொள்-9: நகைப்பால் நலம் பெறுவோம்

செய்திப்பிரிவு

நகைப்பால் நலம் பெறுவோம் முனைவர் என்.மாதவன் சர் சி.வி.ராமன் ஒரு முறை அயல்நாடு சென்றிருந்தார். வழக்கமான ஆய்வுப் பணிகளுக்கு இடையில் ஒரு நாள் மாலை நேரம். அவரது சில நண்பர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது ராமனையும் மது அருந்த கோரியுள்ளனர். ராமனுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது.

இதனால் இதனை நாகரிகமாக மறுக்க விரும்பினார். எனவே என்ன செய்தார் தெரியுமா? “நண்பர்களே நீங்கள் ராமனின் விளைவை ஆல்கஹாலில் பார்க்கலாம். ஆனால், ஆல்கஹாலின் விளைவை ராமனிடத்தில் பார்க்க இயலாது” என்றாராம். அவர்கள் குடித்தது சரியா இவரை அழைத்தது சரியா என்பதெல்லாம் வேண்டாம். ராமன் அவர்களிடமிருந்த நகைச்சுவை உணர்வைப் பாருங்கள். இப்படித்தான் அறிஞர்களில் பலரும் நகைச்சுவை உணர்வோடு வாழ்ந்திருக்கின்றனர்.

கலைவாணரின் அன்றாட நகைச்சுவை

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி. ஏ.மதுரமும் திரையுலகில் நகைச்சுவை தளத்தை ஆட்சி செய்தவர்கள். நகைச்சுவையோடு பகுத்தறிவையும் பரப்பியவர்கள். இப்போதிருப்பது போல் வசனம் பேசகூடத் தேவையில்லாத கலையாக திரைப்படக்கலை அப்போதெல்லாம் இருக்கவில்லை.

வசனம் மட்டுமல்ல பாடல்களைக் கூட நடிப்பவர்களே பாடினர். திரைக்கு முன்னால் மட்டுமல்ல எப்போதுமே அவர்கள் இருவருமே நகைச்சுவை உணர்வு ததும்ப இயல்பாக வாழ்ந்தார்கள். அதற்கு ஒரு சான்று இதோ, ஒரு மாலை நேரம் களைப்பாய் வீட்டிற்கு வந்து சேர்கிறார் என்.எஸ். கிருஷ்ணன். அந்த நேரம் சமையலறையில் இருக்கும் மதுரம் அவருக்கு காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்க நினைத்து, “காபியா இல்ல டீயா?” என்று வினவுகிறார்.

என்.எஸ் கிருஷ்ணன் வரவேற்பறையில் இருந்தபடியே, “டீ.ஏ மதுரம்” என்கிறார். அதாவது தமக்கு தேநீரே வேண்டுமெனவும். அதுவே மதுரம் (தேன்) போன்று இனிமையானது என்றும் அவரை அழைப்பது போலவும் இரு பொருள்பட பேசுகிறார். என்னவொரு சமயம் அறிந்த சொல்லாட்சி. இதனால் தான் இன்றளவும் அவர்களை நாம் நினைக்கிறோம்.

தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை

இன்னொரு சம்பவம் தத்துவத்தின் தந்தை என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் சாக்ரடீஸ் வாழ்வில் நடந்ததாகக் கூறுவர். சாக்ரடீஸ் தாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இளையோரை கேள்விகள் கேட்கத் தூண்டிக்கொண்டிருந்தார். எதையும் கண்மூடித்தனமாக ஏற்கக் கூடாது என்பது அவருடைய தத்துவ சிந்தனையின் ஆணிவேராக இருந்தது. அவர் எழுப்பிய கேள்விகளால் அன்றைய கிரேக்க அரசாட்சியே ஆட்டம் கண்டது.

இளைஞர்களை சிந்திக்கவும் சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்விகள் எழுப்பவும் உந்தித்தள்ளிய அந்த பழுத்த ஞானியை அரசு உலகைவிட்டே அனுப்ப திட்டம் தீட்டியது. பெரும் ராஜ்ஜியத்தையே நடுநடுங்க செய்த தத்துவக் கேள்விக் கணைகளை ஏவிய சாக்டடீஸ் சமூக அமைதிக்கு தீங்கு விளைப்பதாகக் குற்றம்சாட்டி அவரை சிறையில் அடைத்தது. குடித்ததும் உயிர் போகும் ‘ஹெம்லாக்’ என்ற கொடிய விஷம் கலக்கப்பட்ட பானத்தை பருகச் சொல்லி சாக்ரடீஸை கொன்றது.

இப்படிப்பட்ட சாக்ரடீஸின் வீட்டுக்கு அவரது நண்பர்கள் பலரும் வந்து எப்போதும் எதையாவது விவாதித்து கொண்டிருப்பார்களாம். இது அவரது துணைவியாருக்குப் பிடிக்காதாம். அதனால் எந்தவிதமான முகதாட்சண்யமுமில்லாமல் சாக்ரடீசைத் திட்டுவாராம். இவ்வாறு ஒருநாள் திட்டியும் நண்பர்களும் நகரவில்லை. சாக்ரடீசும் பேச்சை நிறுத்தவில்லையாம்.

இதனால் மேன்மேலும் கோபமுற்ற அவரது மனைவி ஒரு குடம் நீரை மாடியில் இருந்து அவரது தலையின் மேல் கொட்டினாராம். சாக்ரடீஸ் முழுவதும் நனைந்தார். இருப்பினும் அவருக்கு கோபம் வரவில்லையாம். மாறாக எங்கெல்லாம் இடி இடிக்கிறதோ அங்கெல்லாம் மழையும் பெய்யும் என்றாராம். அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ளலாம்.

இந்த சம்பவம் பெர்னாட்ஷாவின் வாழ்வோடும் பொருந்துவதாக ஒரு தகவல் உண்டு. எது எப்படியிருப்பினும் நகைச்சுவை உணர்வென்பது அறிஞர்களின் கைவசம் எப்போதும் இருந்திருக்கிறது. நகைச்சுவை மனோபாவம் மட்டுமில்லை என்றால் நான் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என்று காந்திகூட ஒரு முறை கூறியதாகத் தகவல்.

நம் வாழ்வின் பெரும்பகுதி நேரம் ஏதாவது ஒரு சிக்கலோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண இயல்கிறதோ இல்லையோ நகைச்சுவை உணர்வு நம்மை புத்துணர்வோடு வைத்திருக்க உதவும். வேண்டுமானால் ஒன்று செய்யலாம். முகத்தை கோபமாக வைத்திருக்கும்போது உங்களுடைய முகத்தின் தசைகள் எவ்வளவு இறுக்கம் அடைகின்றன என்பதை மட்டும் கவனியுங்கள். சும்மாவா சொன்னார் திருவள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக என்று!

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

SCROLL FOR NEXT