இரா.முரளி
“எப்போது எங்கள் மீது குண்டு விழும் என்று தெரியவில்லை. தினமும் பலர் எங்கள் ஊரில் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு உதவ யாருமே இல்லை. எங்கள் நாட்டில் குழந்தைகள் பலர் குண்டு வீச்சால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு செல்ல முடியாது. நான் மறுபடியும் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிக்க வேண்டும். உலகத்தினரே!
நீங்கள் எங்கள் நாட்டில் அமைதி திரும்ப உதவி செய்யவேண்டும். எங்களின் ஓலம் உங்களுக்குக் கேட்கிறதா? இங்கு நடைபெறும் உள்நாட்டு யுத்தம் இன்று புதிதாக
தொடங்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உங்களுக்கும் தெரியும்தானே? உலகத்திலே இதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? என்னசெய்யப் போகிறீர்கள்? எனக்குத் தேவை அமைதி, அமைதி!” இப்படி உலகத்தினரைப் பார்த்து 2016-ம் ஆண்டில் பலவினாக்களை எழுப்பியவர்தான் சிறுமி பானா அலபெட்.
‘எனக்குத் தேவை அமைதி’
தான் எந்த நொடியிலும் கொல்லப்படுவோம் என்ற அச்சமான சூழ்நிலையில் சமூக ஊடகமான ட்விட்டர் வழியாக இந்தச் செய்தியைப் பரப்பினாள் பானா அலபெட். 2009-ல் ஜூன் 7ம் தேதி பிறந்தவள். சிரியா என்னும் நாட்டைச் சேர்ந்தவள். கடந்த 10 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப் போர்நடைபெற்று வருகிறது. ஆளும் அரசை எதிர்த்துப் பல மக்கள் இயக்கங்கள் ஆயுதம் தாங்கி போராடி வருகின்றனர். அரசும் மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது. போராடும் இயக்கங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும் உள்ளது.
விளைவு… சொந்த மக்கள் மீதே குண்டுகளை வீசிக் கொல்லும் அவலம். தினமும் ஆயிரக்கணக்கானோர் இதில்பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பானா மேற்கண்ட ட்விட்டர் செய்தியை பதிவிட்டாள். தன்னுடைய தாய் பாத்திமாவின் உதவியுடன் தங்களுடைய உயிர் ஊசலாடும் நிலையை ட்விட்டரில் பதிவிட்டு உலகிற்கு அறியச் செய்தார். “எனக்குத் தேவை அமைதி” என்ற அந்த ஏழு வயது சிறுமியின் வாசகம் உலகையே உலுக்கியது. பானா அரசினால் எதிரியாக பார்க்கப்பட்டாள். பானாவின் வீட்டின் மேலேயே குண்டு வீசப்பட்டது. அதில் தப்பித்த பானாவின் குடும்பம், உயிருக்கு பயந்து ஓடியது.
வலை வீசிய அரசு
“எங்களை காப்பாற்றுங்கள்!” என்று உலகே கேட்கும்வண்ணம் இந்த சிறுமி அனுப்பிய ட்விட்டர் செய்திபோரிடுபவர்களையும் தற்காலிகமாக போர் நிறுத்தத்திற்கு உந்தித்தள்ளியது. அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு அரசும் அனுமதி அளித்து. சற்றேபோர் நிறுத்தப்பட்டது. குளிரிலும் பசியிலும் வாடி ஆயிரக்கணக்கானோர், அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். பானாவின் குடும்பமும் அப்படித்தான். ஆனால், பானாவை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என்று சிரியா அரசு அவளை தேடியது.
தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றத் துடித்த தாய் பாத்திமா, பானாவிற்கு ஆண் குழந்தை வேடமிட்டு தப்பிக்க வைத்தாள். இதற்கு முன்னரே எப்படியோ உயிர் தப்பித்து அகதியாக நாட்டை விட்டு வெளியேறி பக்கத்து நாடான துருக்கியில் தஞ்சம் புகுந்தனர் பானாவின் குடும்பத்தினர். இன்று அவர்களுக்கு அங்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது.
அமைதிக்கான தூதர்
பானாவின் ட்விட்டர் பதிவுகள் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அகதியான அவள் அமைதிக்கான தூதுவராக அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டார். பல அரங்குகளில் பேசத் தொடங்கினார். ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்ட போது, “உலக அமைதியை உருவாக்க எல்லோரும் ஒன்றாய் கைகோர்ப் போம்” என்று பானா முழக்கமிட்டார்.
‘அன்புள்ள உலகமே!’ எனும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து பலருக்குப் போய் சேர்ந்தது. அட்லான்டிக் கவுன்சில் என்ற அமைப்பு 2018 க்கான விடுதலை விருதை (Freedom Award) பானாவிற்கு வழங்கியது. ஆனால், சிரியாவில் யுத்தம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பானாவின் அமைதிக்கான முயற்சியும்
தொடர்கிறது. இம்முறை கோடிக்கணக்கான உலகத்தினரின் ஆதரவோடு.
கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.