கணக்குப் பாடத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பொறியியல்தான் சிறந்த படிப்பு என்று வழிகாட்டப்படுவார்கள். ஆனால், பொறியியலை விட சிறப்பான இதர படிப்புகளும் காத்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது புள்ளியியல் படிப்பு.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தரவுகளை ஆராய்ந்து, ஒப்பிட்டு நாட்டுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டுவதை, புள்ளியியல் துறை சார்ந்த பணியாக எளிய உதாரணமாகக் குறிப்பிடலாம். குடிமைப் பணியில் ஐ.ஏ.எஸ்.,க்கு இணையான ஐ.எஸ்.ஐ., மூலமாக அரசின் உயர் பதவிகளில் புள்ளியியல் பட்டதாரிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். தனியார் துறையிலும் நிதி மேலாண்மை, வர்த்தகம், வங்கி, சந்தை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. புள்ளியியல் துறையின் மேற்படிப்புகளுக்கு பொறியியல் முடித்தவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருவது இதைக் காட்டுகிறது.
ISIAT நுழைவுத் தேர்வு
இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் கொல்கத்தாவைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இதன் வளாக மையங்கள் டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும், கல்வி நிறுவனங்கள் கோவை, மும்பை, புனே உள்ளிட்ட இடங்களிலும் அமைந்துள்ளன. இங்கு புள்ளியியல் தொடர்பான பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் இளநிலை ஹானர்ஸ் படிப்புகளான கணிதம் (B.Math.,) மற்றும் புள்ளியியலில் (B.Stat.,) சேர தேசிய அளவிலான ISIAT நுழைவுத் தேர்வு (Indian Statistical InstituteAdmission Test) எழுத வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2-வில் கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றைப் பாடங்களாகக் கொண்டு தேர்ச்சியடைந்தவர்கள் ISIAT நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணிதத்தில் கூடுதல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் புள்ளியியல் உயர்கல்வியில் ஜொலிக்க முடியும்.
தேர்வு நடைமுறைகள்
ஆண்டின் பிப்ரவரி-மார்ச் மாதங்களின் மத்தியில் விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கி முடிவடையும். இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் முதலில் பதிவு செய்து, பயனர் கணக்கைத் தொடங்கிய பின்னரே விண்ணப்பிக்க இயலும். உரிய ஆவண நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்த பிறகு, இணையதளம் வாயிலாகவோ அல்லது பாரத் ஸ்டேட் வங்கி கிளையின் வாயிலாக நேரடியாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் Algebra, Geometry, Trigonometry, Calculus உள்ளிட்ட கணித பாடங்களில் தயாராக வேண்டும். சரியான விடையை எடுத்து எழுதுதல் மற்றும் கணக்குகளை விரிவாக தீர்த்தல் என எழுத்து முறையிலான 2 தேர்வுகள் நடைபெறும். தலா 2 மணி நேரத் தேர்வுகளாக காலை மற்றும் மாலையில் அவை நடைபெறும். சென்னை, கோயம்புத்தூர் உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நுழைவுத் தேர்வுக்கான மையங்கள் செயல்படும். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தல், தேர்வு அனுமதி அட்டை பெறுதல், நுழைவுத் தேர்வின் முடிவுகளை அறிதல் ஆகிய அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.