தொடர்கள்

ஆசிரியருக்கு அன்புடன்! 10- கானகப் பள்ளி மாணவன்

செய்திப்பிரிவு

ரெ.சிவா

அடர்ந்த காட்டின் இடையே ஓர் இளம்பெண் முதுகில் பெரிய பலகையுடன் இருசக்கர வாகனத்தில் விரைந்துகொண்டிருக்கிறாள். தனது வாகனத்தை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு அவளது பயணம் கானகத்திற்குள் நடையாகத் தொடர்கிறது.

அவளறியாமல் பழங்குடி சிறுவன் ஒருவன்அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான். சோர்வுற்று நினைவு தப்பி மயங்கிவிழுகிறாள். கண்விழிக்கும் போது சுற்றுச் சுவர் இல்லாத தாழ்வான கூரையின் கீழ் படுத்திருக்கிறாள். அவளை உற்றுப்பார்த்தபடியே சில பழங்குடிச் சிறுவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கீழ்க்காட்டுப் பகுதிப்பையன் ஒருவன் கொடுத்த தகவலின்படி அவளை காப்பாற்றியதாக சிறுவர்கள் சொல்கிறார்கள்.

ஏன் பின்தொடர்கிறான்?

புடெட் என்ற அந்த இளம்பெண் ஒரு தொண்டு நிறுவனத்தால் பழங்குடிக் கிராமத்திற்கு மொழியும் கணிதமும் கற்பிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியை. தன்னைக் காப்பாற்றிய சிறுவன் யாரென்று அறியும் ஆவல் ஆசிரியைக்கு ஏற்படுகிறது. அவன் அவ்வப்போது ஒளிந்திருந்து பார்ப்பதை ஆசிரியையும் ஊர் சிறுவர்களும் கவனித்து ஒருநாள் அவனை பிடித்து விசாரிக்கிறார்கள். “நான் மகேகல் கீழ்க் காட்டுப் பகுதியின் பழங்குடியைச் சேர்ந்தவன். என்பெயர் நுயங்சங் புங்கோ” என்று அந்தச் சிறுவன் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அவனுடைய கிராமம் இருக்கிறது. இவ்வளவு தொலைவு நடந்து அவன் ஏன் வரவேண்டும் என்று ஆசிரியை ஆச்சரியத்துடன் யோசிக்கத் தொடங்குகிறார். தொண்டு நிறுவனத்தின் தலைவரிடம், தான் கீழ்க்காட்டுப்பகுதியில் வேலை செய்ய விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால், தலைவர் ஏற்க மறுக்கிறார்.

அப்பாவி மக்களை ஏமாற்றும் சதி

துணைக்கு இரண்டு சிறுவர்களை அழைத்துக்கொண்டு கீழ்க்காட்டுக்கு ஆசிரியை கிளம்புகிறார். ஐந்து நாட்கள் காட்டினுள் நடந்து கீழ்க்காட்டுப் பகுதியைஅவர்கள் அடைகிறார்கள். புங்கோ அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க புதிய கிராமத்தில் ஒரு மரத்தடியில் கற்றல் தொடங்குகிறது. ஆசிரியருக்கான தங்குமிடத்தை உருவாக்கித் தருகிறான் புங்கோ. கல்வி கேடுவிளைவிக்கும் என்று அந்த கிராமத்துப் பெண்கள் நம்புகின்றனர். படிப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கிராமத் தலைவரான தாத்தா, அப்பா இருவரும் புங்கோ படிப்பதற்கு ஆதரவு தருகின்றனர்.

ஒருநாள் சில வெளியாட்கள் வனகிராமத்துக்குள் வருகிறார்கள். பரிசுப்பொருட்களைக் கொடுத்துவிட்டு தாளில் கைநாட்டு வாங்குகிறார்கள். அவற்றில் ஒரு தாளை பதுக்கி வைத்து ஆசிரியையிடம் புங்கோ காட்டுகிறான். தங்கள் கிராமத்தில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதிக்கிறோம் என்றும் வேறு இடம் பெயர்ந்து செல்ல சம்மதிக்கிறோம் என்றும் கிராமத்தவர் அனைவரும் கைநாட்டு வைத்திருப்பது தெரியவருகிறது.

வாசிக்கத் தொடங்கிய சிறுவன்

ஆசிரியைக்கு எதிரான பெண்களின் கோபம் சண்டையாக மாற அவர் கானகத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். மேல் மற்றும் கீழ் காட்டுப் பகுதிகளுக்கு நடுவில் உள்ள ஒரு கடையில் தங்குகிறார். இந்த தகவல் அறிந்து புங்கோ அங்கே படிக்கவருகிறான். சில நாட்கள் கழித்து புங்கோவைத் தேடி அவன் கிராமத்தவர் வருகின்றனர். கிராமத் தலைவர் இறந்துவிட்டார். பத்திரம் கொடுத்திருப்பதால் கிராமத்தைக் காலி செய்ய வேண்டிய நிலை. அவன் படிப்பதால்தான் இத்தனை கேடுகளும் விளைந்ததாக கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

புங்கோ தனது கிராமத்திற்குத் திரும்புகிறான். ஊரைக் காலி செய்துவிட்டு வேறு இடம் நோக்கி அப்பழங்குடியினர் பயணிக்கின்றனர். பழங்குடியினருக்கு நமது கல்வி தேவை இல்லை என்று முடிவெடுத்து வேலையை ஆசிரியை ராஜினாமா செய்கிறார். வாசிப்பு, எளிய கணக்கு, வனம் குறித்த சட்டங்கள் ஆகியவை மட்டுமே போதும். அவர்களுக்கான சூழலியல் பள்ளியை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நண்பர்களின் உதவி கிடைக்கிறது. அவர்களுடன் புங்கோவின் புதிய கிராமத்திற்குச் செல்கிறார்.

கிராமத்திற்குள் நுழையும்போது ஏற்கெனவே சில வெளியாட்கள் அங்கே இருக்கிறார்கள். பரிசுப்பொருட்களுக்குப் பதிலாகக் கைநாட்டு வேண்டும் என்று கூடியிருக்கும் மக்களிடம் கேட்கிறார்கள். “பொறுங்கள். இதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசிக்கிறேன். பிறகு முடிவு செய்யலாம்” என்று சொல்லி புங்கோ வாசிக்கிறான். தங்கள் கிராமத்திற்கு அருகில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதிக்கிறோம் என்பதை வாசித்ததும் கிராமத்தவர் பதறுகின்றனர். உங்களை இங்கே அனுமதிக்க முடியாது என்று புங்கோ கூறுகிறான். புடெட் மற்றும் அவரது நண்பர்கள் மகிழ்கிறார்கள்.

புங்கோவின் உதவியுடன் அக்கிராமத்தில் சிறிய கூரையுடன் கூடிய கானகப் பள்ளிஉருவாக்கப்படுகிறது. சமவெளி மக்களுக்கான கல்வியே மலைப்பகுதி, கடல் பகுதிகளிலும் திணிக்கப்படுகிறது. வாழ்வில் நிலத்தின் பங்கை நன்கு உணர்ந்தே ஐவகையாகப் பிரித்தனர் தமிழர். நில வாழ்வியல் சார்ந்த கல்வியை எப்போது வடிவமைக்கப் போகிறோம்?

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

படத்தின் பெயர் : Sokola Rimba (The Jungle School)
ஆண்டு : 2013
மொழி : இந்தோனேசிய மலாய்

SCROLL FOR NEXT