ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
வேர்களில் இருந்து மரத்தின் நுனிவரை நீர் செல்வதற்குக் காரணம் நுண்புழை ஏற்றம் (Capillary Action) என்பதை தாவரவியலில் படித்திருப்பீர்கள். நுண்புழை ஏற்ற கருத்தியல் விமான விபத்துக்களைத் தவிர்க்க உதவுகிறது என்பது தெரியுமா? விமானத்தின் உலோக பாகங்கள் உற்பத்தி செய்யப்படும்போது அவற்றின் மேற்பரப்பில் சிறிய விரிசல்கள் ஏற்படும். இந்த விரிசல்கள் கண்களுக்கு புலப்பட்டால், அந்த பொருளை நிராகரித்து விட்டு விரிசல் இல்லாத பொருளை விமானம் கட்ட பயன்படுத்துவார்கள். கண்களுக்கு புலப்படாத விரிசலை எப்படி கண்டுபிடிப்பது?
ஒளிர் ஊடுருவல் சோதனை
சாலைகளில் போக்குவரத்தை முறைப்படுத்த ஒளிரும் வண்ணங்களில் (Fluorescent Colours) கோடுகள் வரைந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இரவில் பயணம் செய்யும் போது வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தில் இந்த கோடுகள் பளிச்சென ஒளிரும். இது போன்ற ஒளிரும் மையைப் பயன்படுத்தி உலோக பாகங்களில் உள்ள நுண்ணிய விரிசல்களைக் கண்டு பிடிக்கலாம்.
ஒளிரும் திரவ மையை உலோக பாகத்தின் மீது பூச வேண்டும். நுண்ணிய விரிசல்கள் இருந்தால் நுண்புழை தத்துவத்தினால் மை உள்ளிழுத்துக் கொள்ளப்படும். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த விமான பாகத்தைத் துடைத்து விட்டு, இருட்டு அறையில் புற ஊதா (Ultra Violet) விளக்கொளியில் பார்த்தால் விரிசல்களில் தங்கி இருக்கும் ஒளிர் மை பிரகாசமாகத் தெரியும். இதன் மூலம் விரிசல்கள் இருப்பதை அறிந்து அந்த பாகங்களை நிராகரிக்கலாம். இந்த சோதனைக்கு ஒளிர் ஊடுருவல் சோதனை (Flourescent Penetrant Inspection) என்று பெயர்.
நுண் விரிசலின் முக்கியத்துவம்
மிக நுண்ணிய விரிசல்கள் கூட விமானம் தொடர்ந்து இயங்கும் போது பெரிதாகி விமான பாகம் உடைவதற்குக் காரணமாகிவிடும். விமானத்தின் பாகங்களோ இன்ஜின் பாகங்களோ உடைந்தால் விமானம் விபத்துக்குள்ளாகும். விமான சக்கரத்தின் சிறிய திருகாணியில் குட்டி விரிசல் இருந்தால் கூட, தரையிறங்கும் போது ஏற்படும் அதிக விசையினால் அது உடைய நேரிடலாம்.
இப்படி பொருட்கள் உடைவதை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முக்கிய விமான பாகங்களில் ஒளிர் ஊடுருவல் சோதனை செய்யும் வழக்கமும் உண்டு. நுண்புழை ஏற்றம் என்ற அறிவியல் கருத்தியல் எத்தனை உயிர்களைக் காக்கிறது, எத்தனை விலையுயர்ந்த விமானங்களை பாதுகாக்கிறது பாருங்கள். மக்களின் நல்வாழ்வுக்காக அறிவியல் நடைமுறையில் பயன்படுகிறது.
பூந்துவாலையின் நுண்துளை
நுண்புழை ஏற்றம் விமானத்தில் மட்டுமல்ல வீட்டிலும் பயன்படுகிறது. குளித்துவிட்டு துண்டில் ஈரத்தைத் துடைத்துக்கொள்கிறோம் அல்லவா? துண்டில் உள்ள நுண்துளைகள் நீர்த்துளிகளை இழுத்துக்கொள்வதால்தான் நாம் எளிதில் துடைத்துக்கொள்ள முடிகிறது.
(தொடரும்)
கட்டுரையாளர், ஹெலிகாப்டர் பற்றி முதல் தமிழ் நூலான ‘எந்திரத்தும்பிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.