ஆர். ரம்யா முரளி
இன்றைய காலகட்டத்தில், ஏறக்குறைய அனைவரும் முதுகு மற்றும் தண்டுவடப் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். கவனக்குறைவினாலும் அலட்சியத்தாலும் உட்காரும் போது, நடக்கும் போது, தூங்கும் போது நம்முடைய தண்டுவடம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
தண்டுவடத்தை ஸ்திரப்படுத்தும் சேதுபந்தாசனத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். இது சேதுபந்தாசனம் அல்லது துவிபாதபீடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், கழுத்தில் இருந்து கால் வரை சமதளமாக பீடம் போல காணப்படுவதால் இந்த பெயர்.
செய்வது எப்படி?
உடலின் பின் பகுதி தரையில் இருக்குமாறு படுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து முழங்கால்களை மடித்து வைக்க வேண்டும். பாதங்கள் தரையில் பதிந்து இருக்குமாறு வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் உடலுக்கு அருகே இருக்குமாறு சேர்த்து வைக்க வேண்டும்.
கணுக்காலை கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். தாடையை கீழே இறக்கி, கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூச்சை இழுத்தவாறு இடுப்பை உயர்த்த வேண்டும்.
கழுத்து மற்றும் மார்பு பகுதியில் இருந்து நன்றாக இடுப்பை உயர்த்த வேண்டியது முக்கியம். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு மூச்சை விட்டவாறு மறுபடியும் இடுப்பைக் கீழே இறக்கி பழைய நிலைக்கு திருப்ப வேண்டும்.
ஆரம்பத்தில் சிலருக்கு கணுக்காலைப் பிடிப்பதில் சிரமம் இருக்கும். அவர்கள் சிறிது பழகும் வரை கைகளை கால்களுக்கு அருகே வைத்துக் கொள்ளலாம். அல்லது கைகளை தோள்பட்டை நிலையில் வைத்தும் செய்யலாம்.
பலன்கள் பல
இந்த ஆசனம் செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் பலன்கள் அதிகம். முதுகெலும்பிற்கு மிகவும் பயனுள்ள ஆசனம். இடுப்பை உயர்த்தும்போது நெஞ்சுப் பகுதியில் இருந்து உயர்த்துவதால் மார்பு விரிவடைகிறது. இதனால் மூச்சு விடுதல் சீராகும். மேலும் தொடை பகுதிகளும் நன்றாக வலுப்பெறும்.
தாடையை கீழிறக்கி ஒரு நிலையில் வைப்பதால், தைராய்டு சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதனால் தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
இடுப்பை உயர்த்தும்போது வயிற்றுப் பகுதிகள் விரிவடைவதால், அந்தப் பகுதி தசைகள், மற்றும் உறுப்புகள் தூண்டப்பட்டு பலனடையும். உடலின் மொத்த உறுப்புகளுக்கும் பலன் தருவதால் இது மற்ற கடினமான ஆசனங்கள் செய்வதற்கான ஆரம்ப நிலை பயிற்சி ஆசனமாகவும் கொள்ளலாம்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்