தொடர்கள்

வித்தியாசமாக இருப்பது கேலிக்குரியதல்ல

செய்திப்பிரிவு

ஆட்டிசம் உள்ளவர்களின் வித்தியாசமான நடவடிக்கைகள், அதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள், மற்றவர்கள் அவர்களை அணுக வேண்டிய விதம் குறித்து ஆசிரியர் அன்பு மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

நிர்மலா: ஆட்டிசம் இருப்பவங்களில் சிலர் மேதைகளாகவும் இருக்காங்கன்னு சொன்னீங்க; யாரெல்லாம் அந்த மாதிரி இருக்காங்க சார்?

ஆசிரியர்: லண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் ஐந்து வயது வரை பேச்சுத்திறனற்று, சமூகத் தொடர்புத் திறன் இன்றி இருந்தாலும் அபாரமாக ஓவியம் தீட்டக்கூடியவர். ஹெலிகாப்டரில் பறந்தபடி தான் காணும் நகரத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து விடும் அற்புதத் திறன் படைத்தவர். 2006-ல் இங்கிலாந்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பிரித்தானியப்பேரரசின் பெருமைக்குரிய அங்கம்’ என்ற விருதைப் பெற்றார்.

சித்ரா: உயரத்துல வேகமா போற ஹெலிகாப்டர்லேர்ந்து பார்க்கும் போது எல்லாம் குட்டியா எறும்பு மாதிரி தானே தெரியும்? அதை நுணுக்கமா உற்று கவனிச்சு வரையணும்னா எவ்வளவு பெரிய விஷயம் சார்!

ஆசிரியர்: ஆமா, அதே மாதிரி கொலராடோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியையும், எழுத்தாளருமான டெம்பிள் கிராண்டினுக்கு ஆட்டிசம் இருந்தாலும் தொடா் பயிற்சியாலும் பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும், அக்கறையும் கூடிய கவனிப்பாலும் அதிலிருந்து விடுபட்டாங்க. விலங்குகள் வளர்ப்பு பற்றியும், ஆட்டிசம் பற்றியும் தொடர்ந்து பேசியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வறாங்க.

இப்ராகிம்: அந்த நிலைக்கு வரடெம்பிள் கிராண்டின் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க இல்ல?

ஆசிரியர்: சின்ன வயசுலேர்ந்தே கூட்டம், சத்தமெல்லாம் இவங்களுக்கு பிடிக்காததால கையில கிடைக்கும் பொருளைத் தூக்கி எறிஞ்சு கத்தி கலாட்டா பண்ணுவாங்களாம். நான்கு வயசுலதான் பேசவே ஆரம்பிச்சிருக்காங்க. பள்ளியில சக மாணவர்களிடம் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டதா சொல்லி பள்ளிய விட்டு அனுப்பிட்டாங்க. ஆனால், உண்மை எதுனா அவங்களுடைய நடை, உடை, பாவனையை மற்றவர்களெல்லாம் கேலி செஞ்சிகிட்டே இருந்தாங்க.

ஆனாலும் அவங்களுடைய நிறை குறையோட அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக அவங்களுடைய பெற்றோர் இருந்தாங்க. அதனால டெம்பிள் கிராண்ட்டினை இயற்கைச் சூழல்மிக்க ஒரு பண்ணையில தங்கவைச்சாங்க. அதுதான் அவங்க வாழ்க்கைய மாற்றியது. மனிதர்களோடு ஒத்துப் போக முடியாமலிருந்த டெம்பிள் பண்ணை விலங்குகளோடு ஒன்றிப் போனாங்க.

ஏன்னா மாடுகளுக்கோ, பன்றிகளுக்கோ மனிதர்களைப் போல பிறரைப் பற்றி எந்த முன் முடிவும் கிடையாது. அன்பு காட்டுறவங்க மேலபதிலுக்கு அன்பு காட்டுமே தவிர கேலி செய்யாதுங்க இல்லையா. டெம்பிள் அங்க விலங்குகளைப் பத்தி கத்துக்கிட்ட விஷயங்கள்தான் பிறகு அவங்க விலங்கியல் துறைப் பேராசிரியராக உதவுச்சு.

பாபு: திரும்ப அவங்க ஸ்கூலுக்குப் போனாங்களா சார்?

ஆசிரியர்: வேற பள்ளிக்குப் போனாங்க. அது அவங்க வாழ்க்கையோட அடுத்த திருப்புமுனை. அங்க ஒரு நல்ல ஆசிரியர் "உன்னிடம் குறையேதும் இல்லை, மத்தவங்களைவிட நீ வித்தியாசமானவள், அவ்வளவுதான். உனக்கு எது பிடிக்கும்னு கண்டுபிடிச்சு அதையே உன்னோட உயர்கல்விக்கு தேர்ந்தெடுத்துக்கோ" என்று ஊக்கம் கொடுத்திருக்கார்.

அப்படியே வளரத் தொடங்கிய டெம்பிள் கிராண்டின் ‘சென்ஸரி’ பிரச்சினைகளால தான் பட்ட துன்பங்களை மற்ற ஆட்டிச குழந்தைகளும் அனுபவிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில ‘ஹக்மெஷின்’என்ற இயந்திரத்தை உருவாக்கினாங்க.

ஆட்டிசம் என்பது அவமானமல்ல என்பதை உலகிற்கு உரக்கச் சொன்ன இவரது சேவைகளை அங்கீகரித்தது டைம்ஸ் பத்திரிக்கை. 2010-ம் ஆண்டு சிறந்த நூறு மனிதர்கள் என்ற அடிப்படையில் இவரைத் தேர்ந்தெடுத்து விருது அளித்தது. மற்றவர்களோட கேலி, கிண்டல், அவமானம் எல்லாத்தையும் கடந்து இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்து வரும் டெம்பிள் கிராண்ட் போன்றோரின் சேவை போற்றுதற்குரியது.

(தொடர்ந்து பழகுவோம்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.

SCROLL FOR NEXT