தொடர்கள்

அதிசயங்கள் நிறைந்த அயர்லாந்தின் வகுப்பறை | வகுப்பறை புதிது 43

ஆயிஷா. இரா.நடராசன்

ஐரிஷ் அடையாளங்களைத் தக்கவைக்கும் ஓர் உலக சந்ததியை உருவாக்குவதே எங்கள் கல்வியின் நோக்கம்.- ஜான் கூலான் கல்விக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் ஆண்டுதோறும் முன்வரிசையில் இடம்பிடித்துவரும் ஒரு நாட்டின் கல்விமுறையை ஆகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது ‘அயர்லாந்தின் கல்வி: வரலாறு மற்றும் கட்டமைப்பு' (Irish Education: History and Structure) நூல்.

அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பா வின் ஒட்டுமொத்த இளைய மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர் இங்குதான் வசிக்கின்றனர். இந்நூல் வெளிவந்த 2022ஆம் கல்வியாண்டில் அயர்லாந்தில் உள்ள 3,40,000 மாணவர்களுக் காக 16,124 தொடக்கப் பள்ளிகள் இருந்திருக்கின்றன.

நூலகத் துறையின் அதிகாரம்: தமிழ்நாடு போலவே இரு மொழி கல்விக் கொள்கை அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரிஷ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் பள்ளியில் கற்பிக்க வேண்டும். உயர்கல்வி ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது. அதேநேரத்தில், அயர்லாந்தின் கல்வியை முடிவு செய்வது அந்த மாகாணத்தின் நூலக வாரியம்.

ஒவ்வொரு குழந்தையின் சமூகப் பின்னணி சார்ந்து பாகுபாடுகள் இன்றி கல்விச் சேவை கிடைப்பதை உறுதிசெய்வது நூலகத் துறையின் தலைமையில் இருக்கும் கல்வி ஆணையத்தின் பொறுப்பு. இந்தக் கல்வி ஆணையத்தினுடைய மாவட்ட, வட்ட, வார்டு தலைமைப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம், இங்கிலாந்தின் கல்வி முறையிலிருந்து அயர்லாந்து கல்விமுறையை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இதைத் தவிர அயர்லாந்தை மையப்படுத்தியே இங்கு பொதுக் கல்வி வழங்கப்படுகிறது. ஒரு பாடம் மட்டும் பிரிட்டன் சட்டம், இன்ன பிற அம்சங்களைக் கொண்டதாகக் கற்பிக்கப்படுகிறது. அயர்லாந்திலேயே வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, வட அயர்லாந்து என்று பிரித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, கொங்கு நாடு என்றெல்லாம் நாம் அழைப்பதைப் போல இது இருந்தாலும், பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில் இந்த தனித்தனி மாகாணங்களில் தனித்தனி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் அந்தந்த மாகாணத்துக்காக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. உதாரணமாக, இயற்பியல் பாடத்தைப் பள்ளி இறுதி ஆண்டில் முடிக்கும் முன்னர் இயற்பியல் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள், வானியல் தொலைநோக்கி போன்ற அமைப்புகள் தங்கள் மாவட்டத்தில் எங்கே உள்ளன என்பது குறித்துப் பாடப்புத்தகம் பேசுகிறது.

தனிப் பாடப்புத்தகம்: வட அயர்லாந்து, தென்கிழக்கு அயர்லாந்து என்றெல்லாம் தனித்தனி பாடப்புத்தகங்களை வழங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர். தங்கள் பிராந்தியத்தின் தலைவர்களைக் குழந்தைகள் அறிந்துணரும் வகையில் மண்ணின் மாண்பைப் பேசும் வகுப்பறைகளாக அவை உள்ளன. அதேநேரம் நவீனக் கலைகள், தொழில்நுட்பம், கணிதம் போன்ற வற்றுக்கான பன்னாட்டுத் தேர்வு களில் அவர்கள் முதன்மை இடத்தைப் பெறுகிறார்கள்.

பெற்றோர், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒரு நூலக அவை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாகாண அடிப்படையில் கூடி தங்கள் கல்வியை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் முறையும் அங்குப் பின்பற்றப்படுகிறது. ஆறு வயதில் தொடங்கும் பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த கல்வியாக வளர்ச்சிபெற்று, உலகின் முதல் 10 இடங்களுக்குள் எப்போதும் இடம்பெறும் பல்கலைக்கழகங்கள் வாயிலாக உயர்கல்வியாக வளர்கிறது.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

SCROLL FOR NEXT