நல்ல மனிதர்தான். ஆனால், 'படக்படக்' எனக் கோபம் வந்துவிடுகிறது பாண்டியனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தி வருகிறார். ஆட்டிச பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளில் ஏழு பேர் அவர்களுடைய பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களில் சரவணனும் ஒருவன்.
சரவணன் யாருடனும் ஒட்டுவதில்லை. திடீரென்று அழுவான்; சிரிப்பான்; கைதட்டுவான். ஆட்டிச வதை களைச் சேட்டை என ஆசிரியர் சிலர் நினைத்தனர். தலைமை ஆசிரியரிடம் போய்ப் புகார் அளித்தனர். அவ்வளவுதான்! சரவணன் சீட்டு கிழிந்தது. பெற்றோர் வந்து சரவணனை அழைத்துச் செல்லும்படி தலைமை ஆசிரியர் கட்டளையிட்டார். பாண்டியனின் வகுப்புதான் சரவணன்.
வியப்பூட்டும் பண்பாளர்: சரவணன் மீது அன்பைப் பொழிந்தார் பாண்டியன். குறைபாடு உடைய பையன். ஓரளவு படிப்பான். சுமாராகப் பாடுவான். குழந்தைகளின் குறைபாடு களைப் பொறுத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் என்ன ஆசிரியர்கள்? பாண்டியனுக்குக் கோபம்கோபமாக வந்தது.
ஆனால், அவர் தலைமை ஆசிரியரைச் சந்திக்கவில்லை. பிள்ளைகளைப் பாதுகாக்கும் போர்க்குணம் அவரிடம் இல்லை. வகுப்பறையில் தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்தார். ‘இது நியாயமா?’ எனக் கேட்டார். பிள்ளைகள் ‘திருதிரு’ என விழித்தனர். வீட்டிலும் போய்ப் பொருமினார். மனைவி உமா அவரை ஆதரித்தாள்.
என்ன ஆச்சரியம்! மூன்று நாள்களில் சரவணன் திரும்பவும் வகுப்புக்கு வந்தான். எட்டாம் வகுப்புக்கான தமிழ் ஆசிரியர் சிங்காரம் கொண்டுவந்து விட்டுப் போனார். சிங்காரத்துக்குத் தொண்டைக் கட்டியது போன்ற குரல். குரலை உயர்த்திப் பாரதிதாசன் பாட்டை உற்சாகமாகச் சொல்வார்.
சில மாணவர்கள் கேலியாகச் சிரிப்பார்கள். சிங்காரம் கேலிச் சிரிப்பைப் பொருட்படுத்த மாட்டார். பிள்ளைகளைக் கோபிக்கவும் மாட்டார். இருந்தாலும் அவரிடம் போர்க்குணம் மிகுதியாக இருந்தது. பள்ளியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதை ஆசிரியர் லட்சுமிதான் அவரிடம் சொன்னார். உடனே அவர் தலைமை ஆசிரியரைச் சந்தித்தார்.
சிங்காரத்தைப் பார்த்ததும் தலைமை ஆசிரியரைப் பயம் பற்றியது. சிங்காரத்தின் பின்னால் ஆசிரியர்கள் திரண்டிருந்தனர். அரசு அதிகாரிகளைப் பார்த்துப் பேசவும் சிங்காரம் தயங்கப் போவதில்லை. உடனே சரவணன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பாண்டியனுக்குச் சிங்காரத்தை நினைக்க நினைக்கப் பெருமையாக இருந்தது.
பாடம் எடுத்த சாமானியர்: பாண்டியனால் புறநகர்ப் பகுதியில்தான் வீடு வாங்க முடிந்தது. இன்னும் சாலை வசதி, சாக்கடை வசதி அங்கு வரவில்லை. கொஞ்சக் காலத்தில் வந்துவிடும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் குடியிருப்புவாசிகள் சமாளிக்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் காலை வாசலில் அழைப்பு மணி கேட்டது. பின்வீட்டு தனம் நின்றுகொண்டிருந்தார். அவர் மூச்சுக்காற்றிலே வெப்பம் தெரிந்தது. “என்னம்மா?” என்றார் பாண்டியன்.
“உங்க வீட்டுச் சாக்கடைத் தண்ணீ, எங்க வீட்டு முன்னால வருது சார்” என்றார் தனம். “வருத்தம்தான் அம்மா! ஆனா நம்மால ஒண்ணும் செய்ய முடியாதே...நகராட்சிதானே கவனிக்கணும்” என்றார் பாண்டியன். தனம் பதில் சொல்லவில்லை. சட்டென்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அடுத்த சில மாதங்கள் நகராட்சி அலுவலகத்துக்கு தனம் தொடர்ந்து நடந்தார்.
ஒருநாள் அந்தப் பகுதியில் சாக்கடை வசதி வந்தது. யார் வீட்டுத் தண்ணீரும் யார் வீட்டு முன்னாலும் தேங்கவில்லை. சீக்கிரம் சாலை வசதியும் வரும் என்று தெரிகிறது. இது முழுக்கமுழுக்க தனத்தின் முயற்சி; போராட்டம். எடுத்த காரியத்தை எப்படி முடிப்பது- அதற்காக ஓயாமல் எப்படி நடப்பது- எப்படிப் போராடுவது என்பதைத் தனம் கற்பிக்கிறார். இந்த விஷயத்தில் அவர் ஓர் ஆசிரியர்!
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com