சாம்பியன் ஆவதற்கான கற்றலை தம் மாணவர்களிடம் இருந்துதான் ஆசிரியர் பெற முடியும். - டக் லிமோவ்.
ஓர் ஆசிரியராக நீங்கள் எத்தனை ஆண்டு கால அனுபவம் கொண்டவர்? சிலர் தாங்கள் 20 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியில் இருப்பதாலேயே தம்மை சாம்பியன் ஆசிரியர் என அழைத்துக்கொள்கிறார்கள்.
கல்வியாளர் டக் லிமோவ், ‘சாம்பியனை போலப் பாடம் நடத்துங்கள்’ ( Teach Like A Champion) நூலில், “நீங்கள் 20 ஆண்டு கால அனுபவம் கொண்டவரா அல்லது ஒரே விதமான அனுபவம் கொண்ட கல்வி ஆண்டை 20 முறை அனுபவித்தவரா?” எனும் முக்கியக் கேள்வியை எழுப்புகிறார்.
வகுப்பறையால் ஆனது உலகம்: இந்நூலில் இடம்பெற்றுள்ள, ‘உலகம் அணுக் களால் ஆனது அல்ல... அது வகுப்பறைகளால் ஆனது’ என்பது போன்ற தலைப்புகள் சிலிர்ப்பூட்டு கின்றன. நூலாசிரியர் தானும் கற்றல் கற்பித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டு, தான் செய்வதெல்லாம் சரி என்றே ஒருகாலத்தில் நினைத்ததையும், பிற்பாடு வகுப்பறையில் குழந்தைகளிடமிருந்து தான் பெற்ற படிப் பினை பற்றியும் சுயஅனுபவமாக எழுதியிருக்கிறார். அறிவாற்றல் என்பது ஒருவர் சுயமாக அடைவது, மற்றவர்கள் அவர் களின் மீது திணிப்பதல்ல. ஆகையால் ஆசிரியர் கற்பிப்பதில்லை.
மாணவருக்குள்கற்றல் நடைபெற அவர் தூண்டுகோலாக மட்டுமே திகழ்கிறார். தேர்வு எனும் ஒற்றை இலக்கை நோக்கி முரட்டுத்தனமாக இயங்கும் கல்விச் சாலையில் மாணவர்கள் உடனடியாக எதைக் கற்றுக்கொள்கிறார்கள்? நூலாசிரியர் சொல்கிறார், அவர்கள் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக ஆசிரியரை எப்படிச் சமாளிப்பது, தேர்வை எப்படிச் சமாளிப்பது என்பதைக் கற்றுக் கொள்கிறார்கள். தேர்வில் வெற்றி, ஆனால் கற்றலில் தோல்வி!
வாருங்கள் தெரிந்துகொள்வோம்! - இதன் காரணமாகக் கல்லூரிக்குச் சென்ற பிறகு இதே உத்தியைப் பயன்படுத்துவதால் அவர்கள் கல்லூரி முடித்த கையோடு வேலைக்குப் போவதற்கான திறன் அற்றவர்களாகப் பட்டங்கள் என்றழைக்கப்படும் வெற்று அட்டைகளை வைத்திருப்பவர்களாக மாறுகிறார்கள். இந்நிலையில், “எனக்கே தெரியவில்லை. வாருங்கள் தெரிந்துகொள்ள முயல்வோம்” என்பது போன்ற ஓர் ஆசிரியரின் குரல்தான் அவரை சாம்பியன் ஆசிரியராக மாற்ற முடியும் என்பது நூலாசிரியரின் ஒப்பற்ற கருத்து.
அடிப்படை கற்றல் என்பது ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு. பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகிய மூன்றையும் இணைக்கும் சங்கிலித்தொடர் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர். மாணவர்களின் மனங்களைப் பொறுத்தவரையில் அனைத்து பாடங்களுக்குமான ஒரு சங்கிலித்தொடர் அவர்களுடைய உள்ளங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதே, அதைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்தான் சாம்பியன் ஆசிரியர். மொழிப்பாடத்தில் வரும் ஒரு திறனை அறிவியல் பாடத்திலும் பயன்படுத்தும் உத்தியை ஒருவர் என்றைக்குக் கற்றுக்கொள்கிறாரோ அப்போதுதான் அவர் சாம்பியன் ஆசிரியராக மாறுவார் என்று இந்த நூல் நிறைவடைகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com